ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமீன்

திமுக பிரமுகரை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்ற போது கள்ள வாக்கு…

திமுக பிரமுகரை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்ற போது கள்ள வாக்கு செலுத்த வந்ததாக கூறி திமுக பிரமுகரை தாக்கி அரை நிர்வாணத்துடன் அழைத்துச் சென்றதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது புகார் அளிக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து கொலை மிரட்டல் உள்பட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கடந்த பிப்ரவரி 21 ம் தேதி ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் மார்ச் 9-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் வழங்கி உத்தரவிட்டது. இந்த வழக்கில் ஜாமீன் கிடைக்காததால் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெயக்குமார் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இவ்வழக்கு நீதிபதி ஏ. டி. ஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வந்தபோது, பாதிக்கப்பட்டவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால் நிபந்தனை ஜாமீன் வழங்கலாம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் இரண்டு வாரத்திற்கு கையெழுத்திட வேண்டும் எனவும் வெளியூர்களுக்கு செல்லக்கூடாது எனவும் நீதிபதி உத்தரவிட்டு ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கினார்.

இதனிடையே சாலை மறியல், தொழிற்சாலை அபகரிப்பு என இரு வழக்குகள் ஜெயக்குமார் மீது பதிவு செய்யப்பட்டது. சாலை மறியல் வழக்கில் ஜாமீன் கிடைத்த நிலையில் தொழிற்சாலை அபகரிப்பு வழக்கில் மார்ச் 11 வரை நீதிமன்றக் காவல் வழங்கி ஆலந்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.