நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி பெரியார் சிலை மூடப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையம் அருகே தந்தை பெரியார், காமராஜர், டாக்டர் சுப்பராயன் உள்ளிட்ட தலைவர்கள் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததை அடுத்து தலைவர்களின் சிலைகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், பெரியார் சிலை மூடப்பட்டதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள், திராவிடர் விடுதலை கழகம், அம்பேத்கர் நற்பணி மன்றம் ஆகிய அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.
மேலும், பெரியார் சிலையை மூடியிருந்த சாக்குப் பையையும் அவர்கள் அகற்றினர். சென்னை உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கில் பெரியார் சிலையை மூடக்கூடாது என உத்தரவிடப்பட்டிருப்பதையும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் சுட்டிக்காட்டினர்.







