2022-2023 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாட்டின் வேளாண் பட்ஜெட் தாக்கல் நிறைவு பெற்றது.
தமிழ்நாடு அரசின் முதல் முழுமையான வேளாண் நிதி நிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு வேளாண்மைக்கு தனி நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்டு, 2021-22 ஆம் ஆண்டுக்கான திருத்திய நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டபோது, வேளாண்மைக்கும் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று வேளாண் பட்ஜெட்டை விவசாயத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், 2வது முறையாக தாக்கல் செய்தார். இன்று காலை 10 மணி அளவில் இந்த பட்ஜெட் தாக்கலை வாசிக்க தொடங்கினார் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம். சென்ற ஆண்டின் வேளாண் நிதி நிலை அறிக்கை தவழும் மழலை; இந்த ஆண்டின் வேளாண் நிதி நிலை அறிக்கை நடக்கும் குழந்தை. இனிவரும் ஆண்டுகளில் வேளாண் நிதி நிலை அறிக்கை ஒடுகிற குழந்தையாய் இருக்கும் எம கூறி தனது வேளாண் உரையை தொடங்கினார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.
ஒரு மணி நேரம் 30 நிமிடம் நிதி நிலை அறிக்கையை வாசித்த வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட் உரையை நிறைவு செய்தார். இதனையடுத்து சட்டமன்றம் நாளை மறுநாள் காலை 10 மணிக்கு கூடும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.
மேலும், இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 24ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. 21,22,23 ஆகிய 3 நாட்கள் பட்ஜெட் மீது விவாதங்கள் நடப்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 24ஆம் தேதி முன்பண மானியக் கோரிக்கை மற்றும் நிதியமைச்சர், வேளாண் அமைச்சர் பதிலுரை நடைப்பெறும் என திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.







