நடிகை கௌதமி அளித்த புகார்; தலைமறைவாக உள்ள அழகப்பன் உட்பட 6 பேரை பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு!

நடிகை கௌதமி அளித்த நில மோசடி புகாரில் தலைமறைவாக உள்ள அழகப்பன், அவரது குடும்பத்தினர் உட்பட 6 பேரை பிடிக்க போலீஸார் 3 தனிப்படைகள் அமைத்துள்ளனர்.  பாஜகவில் இருந்து விலகிய கௌதமி தனது சொத்துகளை…

நடிகை கௌதமி அளித்த நில மோசடி புகாரில் தலைமறைவாக உள்ள அழகப்பன், அவரது குடும்பத்தினர் உட்பட 6 பேரை பிடிக்க போலீஸார் 3 தனிப்படைகள் அமைத்துள்ளனர். 

பாஜகவில் இருந்து விலகிய கௌதமி தனது சொத்துகளை காரைக்குடியைச் சேர்ந்த பைனான்சியர் அழகப்பன் மோசடி செய்ததாக அளித்த புகார் குறித்து சென்னை மத்திய பொருளாதார குற்றப்பிரிவுக் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதன்படி, சிவகங்கை மாவட்டம், கோட்டையூரில் உள்ள அழகப்பன் வீட்டில் விசாரணைக்கு சென்ற காவல்துறையினர்,  மோசடி செய்யப்பட்ட நிலம் தொடர்பான ஆவணங்கள் எதுவும் உள்ளதா என ஆய்வு மேற்கொண்டனர்.  மேலும், மோசடி செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட நிலத்தின் ஆவணங்களைச் சரிபார்க்கும் பணியையும்,  காரைக்குடி வருவாய்த்துறை அதிகாரிகள் உதவியோடு,  சென்னை பொருளாதார குற்றப்பிரிவுக் காவல்துறையினர் மேற்கொண்டனர்.

அதன்படி அக்டோபர் 31 நண்பகல் தொடங்கிய அந்த பணி நள்ளிரவில் நிறைவுப் பெற்றது. அதன் பின், சோதனைச் செய்யப்பட்ட அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டன.  அத்துடன், முக்கிய ஆவணங்களைச் சென்னை காவல்துறை கைப்பற்றியுள்ளனர்.

இந்நிலையில், தலைமறைவாக உள்ள அழகப்பன், அவரது குடும்பத்தினர் உட்பட 6 பேரை பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.  6 முறை சம்மன் அளித்தும் அழகப்பன் உட்பட குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நபர்கள் ஆஜராகவில்லை என மத்திய குற்றப்பிரிவு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்குச் சொந்தமான மதுரை,  சிவகங்கை,  காரைக்குடி ஆகிய 5 இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவணங்களை நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளதாகவும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

நடிகை கௌதமி தனக்கு சொந்தமான கோட்டையூரில் உள்ள 25கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அழகப்பன் மோசடி செய்து விட்டதாக மத்திய குற்றப்பிரிவில் புகார்  அளித்திருந்தார்.  அதன் அடிப்படையில் 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.