நயன்தாரா, விக்னேஷ் சிவனுக்கு எதிராக ஆணையர் அலுவலகத்தில் புகார்

நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் தம்பதி, சட்டத்தை மீறி வாடகை தாய் மூலம் இரட்டை…

நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் தம்பதி, சட்டத்தை மீறி வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தை பெற்றெடுத்துள்ளதாக சர்ச்சைகள் கிளம்பி வருகிறது. குறிப்பாக சட்டத்தை மீறி வாடகை தாய் மூலம் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதி குழந்தை பெற்றெடுத்துள்ளனரா என தமிழக சுகாதாரத்துறை சார்பில் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

இந்த நிலையில் மத்திய மற்றும் மாநில சட்ட விதிகளை பின்பற்றாமல் வாடகைதாய் மூலம் குழந்தை பெற்றுள்ளதாக நடிகை நயன் தாரா மற்றும் விக்னேஷ் மீது வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

அதில், “மத்திய மற்றும் மாநில அரசுகள் வாடகைதாய் ஒழுங்குமுறை சட்டம் கொண்டு வந்துள்ளன. கர்ப்பபையில் பிரச்சனை, குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத சூழல் உள்ளிட்ட சில காரணங்களுக்காக மட்டுமே வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள முடியும்.இந்த விதிகளின் படி வாடகை தாய் தேவை என்ற மருத்துவ சான்றிதழை மாவட்ட மருத்துவ வாரியத்திடமிருந்து பெற வேண்டும். ஆனால், இந்த விதிகளை மீறி நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் வாடகை தாய் மூலமாக குழந்தை பெற்றுள்ளனர்” என்று குற்றம்சாட்டினார்.

மேலும் அரசு விதிமுறைகளை மீறி திருமணமாகி ஓராண்டு நிறைவடையாமல் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுள்ள நயன்தாரா, விக்னேஷ் சிவன் தம்பதி மீது மத்திய மற்றும் மாநில வாடகை தாய் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளார். இது இளைஞர்கள் மற்றும் சமூகத்தினருக்கு தவறான முன்னுதாரணமாக இருப்பதாக புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

எனவே சட்டவிரோதமாக வாடகை தாய் முறையை ஊக்குவிக்கும் தம்பதி நயன்தாரா, விக்னேஷ் சிவன், வாடகை தாய் மற்றும் வாடகை தாய் சிகிச்சையில் ஈடுபட்ட மருத்துவர்கள் ஆகியோரை விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.