அன்று அண்ணா கையில் மாநில சுயாட்சி பாசறை ! இன்று ஸ்டாலின் கையில் திராவிட பாசறை !

திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி பிறந்த ஜூன் மாதம் 3ஆம் தேதி முதல் திராவிட பாசறைக் கூட்டங்களை நடத்த வேண்டும் என அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.…

திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி பிறந்த ஜூன் மாதம் 3ஆம் தேதி முதல் திராவிட பாசறைக் கூட்டங்களை நடத்த வேண்டும் என அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இது திமுகவை தோற்றுவித்த பேரறிஞர் அண்ணாவின் மாநில சுயாட்சிக்கா ஆரம்பிக்க பாசறையின் மறு பிரதிபலிப்பு என்றே கூறப்படுகிறது. திமுகவை தோற்றுவித்தவரும், மறைந்த முதலமைச்சருமான பேரறிஞர் அண்ணா தனது தனி நாடு கொள்கையை கைவிட்ட பின்னர் கையில் எடுத்த ஆயுதமே மாநில சுயாட்சி கொள்கை. இதனை மக்களிடையே பிரச்சாரமாகவே எடுத்துச் சென்றனர் அன்றைய திமுக தலைவர்கள்.  அதனுடைய மறுபதிப்புதான் திராவிட பாசறை என்கின்றனர் இன்றைய திமுக தலைவர்கள்.

பேரறிஞர் அண்ணா அன்று என்ன சொன்னார் என்பதை விரிவாக பார்ப்போம். கடந்த 1962 இல் சீனப் படையெடுப்பையொட்டி இந்திய ஒற்றுமையின் அவசியத்தை உணர்ந்து, திமுக பிரிவினைக் கோரிக்கையைக் கைவிட்டபோதே, அறிஞர் அண்ணா தெளிவாகச் சொல்லியிருக்கிறார். ‘நாங்கள் பிரிவினையைத்தான் கைவிட்டோமேயன்றி, பிரிவினைக்கான காரணங்களைக் கைவிடவில்லை; அவற்றை அடைய நாங்கள் இனி இந்திய ஒற்றுமை என்னும் நான்கு சுவர்களுக்குள்ளாக நின்று போராடுவோம்!’ என்று கூறினார்.

அதாவது : பிரிவினையைக் கைவிட்டோம் என்கிற காரணத்தினால் இந்தி ஆதிக்கத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழ் மொழியின் ஏற்றத்திற்கும், தமிழின் மேம்பாட்டிற்கும், தமிழ் மரபின் பாதுகாப்பிற்கும் பாடுபடுவதிலிருந்து ஓய்வு கொள்ள முடியாது; தமிழ்நாட்டு உரிமைகளுக்காகப் போராடுவதிலிருந்து விலகிக்கொள்ள முடியாது; திட்டத் தொகையிலிருந்தும், பிற துறைகளிலும் தமிழ்நாட்டிற்கு நியாயமான பங்கு கிடைக்காததைக் காதில் போட்டுக் கொள்ளாமல் இருக்க முடியாது; ‘ஏகாதிபத்தியச் சுரண்டல் முறைக்குச் சரணாகதியடைய முடியாது.

இந்தி ஆதிக்க ஒழிப்பு, தமிழ் மொழி – தமிழ் இன – தமிழ் மரபின் மேம்பாடு , தமிழ்நாட்டின் உரிமைகள்,  அதன் நியாயமான பங்கு போன்ற இலட்சியங்களை அடைவதற்குப் பிரிவினையை ஒரு மார்க்கமாக முன்பு திமுக கொண்டிருந்தது. பிரிவினையை முற்றிலும் ஒருமித்த முடிவாகக் கைவிட்ட பிறகு, அந்த இலட்சியங்களை, அரசியல் சட்டத்திற்கு உட்பட்ட முறையில், இந்திய ஒற்றுமைக்கு சிறிதும் குந்தகம் ஏற்படாத வகையில், அரசியல் சட்டத்தைத் திருத்தி, அடைவதற்கு திமுக பின்னர் ஏற்றுக்கொண்ட மார்க்கம்தான் மாநில சுயாட்சி .

அறிஞர் அண்ணா தலைமையில் கடந்த 1967ஆம் ஆண்டு திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றபோது, இன்றைய அரசியல் அமைப்புச் சட்டத்திலுள்ள கூட்டாட்சிக்கு முரண்பாடாக உள்ள பிரிவுகளை நேரடியாக அனுபவபூர்வமாக உணரும் வாய்ப்புக் கிடைத்தது. கடந்த 1967 ஆம் ஆண்டு ஏப்ரல் 8ஆம் தேதி டெல்லியில் செய்தியாளர்கள் கூட்டத்தில், மாநிலங்களுக்குப் போதுமான அதிகாரங்களை வழங்கிவிட்டு, நாட்டின் ஒருமைப்பாட்டையும், ஒற்றுமையையும் பாதுகாப்பதற்கு எவ்வளவு அதிகாரங்கள் தேவையோ அவைகளை மட்டும் மத்திய அரசு வைத்துக் கொண்டால் போதும். இப்படி அதிகாரங்களைப் பங்கீடு செய்வதற்கும், அரசியல் சட்டம் செயல்படுவதற்கும், ஒரு உயர் அதிகார ஆணைக்குழு ஒன்றினை அமைக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சராக இருந்த அறிஞர் அண்ணா தெரிவித்தார்.

தேர்தல் நேரத்தில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாதபடியும், விலைவாசிகளைக் கட்டுப்படுத்த முடியாதபடியும், இன்றைய அரசியல் அமைப்பில் மாநிலங்கள் இருந்து வருவதைப் பலமுறை சட்டமன்றத்திலே தெரிவித்திருக்கிறார். அறிஞர் அண்ணா அவர்கள் உயிர் வாழ்ந்தபோது இறுதியாக ‘ஹோம்ரூல்’ ஏட்டில் தம்பிக்கு எழுதிய  மடல்களில் தமது உள்ளக் கிடக்கையையும், திமுக தொண்டர்களின் கடமையையும் ஒரு இலட்சிய விளக்கமாகத் தெரிவித்திருக்கிறார்.

’அன்புள்ள தம்பி, நான் பதவியைத் தேடி பைத்தியம் பிடித்து அலைபவனுமல்ல, காகிதத்தில் கூட்டாட்சியாகவும், நடைமுறையில் மத்தியில் அதிகாரக் குவிப்புக் கொண்டதாகவும் இருக்கிற ஒரு அரசியல் சட்டத்தின் கீழ் முதலமைச்சராக இருப்பதற்கு மகிழ்ச்சி கொண்டிருப்பவனுமல்ல. இதற்காக மத்திய அரசிற்கு எரிச்சல் ஏற்படுத்துவதும், டில்லியோடு சண்டை போடுவதும்தான் எனது நோக்கம் என்று கூறும் எனது நல்ல நண்பர் ஈ.எம்.எஸ்யை போல் நான் பிரகடனம் செய்ய விரும்பவில்லை. அதனால் யாருக்கும் நன்மையில்லை. உண்மைதான், சரியான பருவத்தில் ஒரு உறுதி ஏற்பட வேண்டுமென்பதுதான் முக்கியம். ஆனால், கூட்டாட்சி முறையைப் பற்றி மக்களுக்கு விளக்கம் கொடுப்பதை அதற்கு முன்னால் செய்ய வேண்டும். அந்தப் பணியில், அன்புத் தம்பி, உன்னுடைய உற்சாகமான ஒத்துழைப்பும், மனப்பூர்வமான பங்கேற்பும் எனக்குக் கிடைக்குமென்பதில் எனக்கு நிச்சயம் நம்பிக்கை உண்டு’, என்றார் அண்ணா.

அப்படியானால். கொஞ்சமும் திருப்தியற்ற ஒரு அரசியல் அமைப்பின் கீழ் திமுக எதற்காகப் பதவியில் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும்? இதற்கும் அதே மடல்களில் அறிஞர் அண்ணா பதில் அளித்திருக்கிறார். “பதவியில் இருப்பதன் மூலம், இன்றைய அரசியல் அமைப்புச் சட்டம் கொல்லைப்புறமாகக் கொண்டுவரப்பட்ட ஒரு இரட்டை ஆட்சிதான் என்பதைச் சிந்திக்கக் கூடிய பொதுமக்களின் கவனத்திற்கு திமுக கொண்டு வரமுடியுமானால், அது உண்மையிலேயே அரசியல் உலகிற்குச் செய்யப்படும் குறிப்பிடத்தக்க உதவியாகும்”.

– அந்தப் பணியைத்தான் திமுக தொடர்ந்து செய்து வருகிறது. சிந்திக்கக் கூடிய தமிழ்நாட்டு மக்களுடைய கவனத்திற்கு மட்டுமல்ல, இந்திய மக்களின் கவனத்திற்கே தற்போதைய அரசியல் சட்டத்தின் குறைகளை எடுத்துக் காட்டி வருகிறது எனக் கூறுகிறார் அண்ணா. இதனை மக்களிடம் எடுத்துச் செல்வதே அன்று மாநில சுயாட்சி பாசறையின் முக்கிய கடமையாக இருந்தது.

இன்று திமுக தலைவர் முக ஸ்டாலின் கையில் எடுத்துள்ள திராவிட பாசறையின் தேவையும், அதுவும் ஒன்றாகதான் உள்ளன என்கின்றனர் திராவிட சிந்தனையாளர்கள். காலங்கள்தான் கடந்துள்ளன. அண்ணாவின் எண்ணங்கள் இன்னமும் முழுமைப்பெறவில்லை. அப்பிரச்சனைகளைதான் இன்று மக்கள் மன்றத்திற்கு எடுத்துச் செல்லவே திராவிட பாசறைகள் உருவாக்கப்படுகின்றன. அது என்ன ? திராவிட பாசறை மூலம் எதனை மக்களிடம் கொண்டு செல்லப்போகிறார் ஸ்டாலின் என்பதை பார்க்கலாம்.  இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி இந்தியா கூட்டாட்சி (Federalism) நாடாகும். பல மாநிலங்களின் ஒன்றியம் (Union of states) இந்தியா. ஆசிய கண்டத்தில் இருந்தாலும் இந்தியாவை ஒரு துணைக் கண்டம் என்கிறோம். ஏனெனில், ஒவ்வொரு மாநில மக்களும் தனித்த தேசிய இனங்களாக, தங்களுக்கென தனியாக மொழி, பண்பாடு, கலாச்சாரத்தைக் கொண்டு, ஒரு நாடாக உள்ளனர்.

நிர்வாக வசதிக்காக இந்திய ஒன்றிய அதிகாரப் பட்டியல், மாநில அரசுகளின் அதிகாரப் பட்டியல், இரண்டுக்கும் பொதுவான பட்டியல் (Concurrent list) என்று 3 வகையாக அதிகாரங்கள் அரசமைப்பின் 7வது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, நாட்டின் எல்லை, பாதுகாப்பு, ராணுவம், நிதி, வெளியுறவு, அணுசக்தி, வான், கப்பல் போக்குவரத்து  உள்ளிட்ட 100 துறைகள் ஒன்றிய அரசிடம் உள்ளன. இத்துறைகளில் ஒன்றிய அரசு மட்டுமே முடிவுகள் எடுக்க முடியும். தேவையான சட்டங்களை இயற்றலாம். ஆரம்பத்தில் 97 துறைகள் இருந்தன.

காவல், சட்டம் ஒழுங்கு, பொது சுகாதாரம், உள்ளாட்சி, சிறைத்துறை,  பொது வழிபாடு, மது விற்பனை  உள்ளிட்ட 61 துறைகள் மாநில அரசுப் பட்டியலில் உள்ளன. இத்துறைகளில் மாநில அரசுகள் முடிவு எடுக்கலாம். தேவையான சட்டங்களை இயற்றலாம். ஆரம்பத்தில் கல்வி, விளையாட்டு, வனம் உள்ளிட்ட 66 துறைகள் இருந்தன. எமர்ஜென்சி காலத்தில் கல்வி உள்ளிட்ட 5 துறைகள் பொதுப்பட்டியலுக்கு கொண்டு செல்லப்பட்டன. இப்போதும் தொடர்கிறது. வனம், மின்சாரம், தொழில் உள்ளிட்ட 52 துறைகள் பொதுப்பட்டியலில் உள்ளன. இத்துறைகள் குறித்து இரு அரசுகளும் சேர்ந்து முடிவு செய்யலாம். சட்டம் இயற்றலாம்.

ஜனநாயகத்தின் அடிப்படையான அதிகாரப் பகிர்வு என்பது   நடைமுறையில் இல்லாமல், ஒன்றிய அரசிடமே அதிகாரங்கள் குவிந்துள்ளன. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசாகவே இருந்தாலும் மத்திய அரசின் கட்டுப்பாட்டிலும் அவர்களின் இசைவு பெற்றே செயல்பட வேண்டியுள்ளது. இது முழுமையான கூட்டாட்சி அல்ல. கூட்டாட்சி போன்று தோற்றம் அளிக்கும் ஒரு அமைப்பு  என்று K.C.வியார் போன்ற அரசியல்அறிஞர்கள் கூறுகின்றனர்.

தெளிவாக சொல்வதென்றால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு இருந்தாலும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில்தான் செயல்பட முடியும். குறிப்பாக முதலமைச்சர் இருக்க, மத்திய அரசால் நியமிக்கப்படும் ஆளுநர் ஒப்புதலின்றி எதுவும் இங்கு நடைமுறைக்கு வராது. இன்னும் குறிப்பிட்டு சொல்வதென்றால், மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் (NEET) தேர்வை ரத்து செய்யக் கோரும் தீர்மானம் இன்றளவு கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதுபோன்றவற்றை மக்கள் மன்றத்தில் எடுத்து செல்லும் பணியையே திராவிட பாசறை மேற்கொள்ளும் எனத்த தெரிகிறது.

இதுதான் ஸ்டாலின் கூறும் திராவிட பாசறை. மக்களிடம் செல், மக்களோடு மக்களாக சேர்ந்து வாழ், மக்களுக்கு பணியாற்று என்ற அண்ணாவின் அறிவுரைகளை நடைமுறைப்படுத்தபோவதுதான் இந்த திராவிட பாசறை முக்கிய பணி என்கின்றனர் உடன்பிறப்புகள். ஒரே நாடு, ஒரே ரேசன் போன்ற திட்டங்கள் தேவையற்ற ஒன்று எனவும், இது மாநில அரசின் உரிமைகளை பறிப்புதாகும். இதனை திராவிட பாசறைக் கூட்டங்கள் மூலம் மக்களிடையே எடுத்துரைக்கவுள்ளது திமுக.

இராமானுஜம்.கி

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.