முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

வணிக வரித் துறை பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கி பட்டியல் வெளியிட வேண்டும் – அன்புமணி

வணிக வரித் துறை பணியாளர்களுக்கு உச்சநீதிமன்ற ஆணைப்படி பதவி உயர்வு வழங்கி உடனே பட்டியல் வெளியிட வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து, பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசின் வணிக வரித் துறை பணியாளர்களுக்கு மாறுதல் வழி மூலமான பணி நியமனங்களில் இட ஒதுக்கீடு வழங்குவது செல்லும். அதனடிப்படையில் 1981ஆம் ஆண்டு முதல் பதவி உயர்வுக்கான பணிமூப்பு பட்டியலை வெளியிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் தீர்ப்பளித்துள்ள நிலையில், அதை செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது ஏமாற்றமளிக்கிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

வணிக வரித் துறையில் உதவி வணிக வரி அலுவலர், பதிவுத் துறையில் இரண்டாம் நிலை சார்பதிவாளர் ஆகிய பணிகளுக்கான காலியிடங்களில் மூன்றில் ஒரு பங்கு நேரடி நியமனத்தின் மூலமாகவும், இரு பங்குகள் அதே துறைகளில் உதவியாளர் நிலையில் இருப்பவர்களைக் கொண்டு மாறுதல் மூலமான நியமனம் வழியாகவும் நிரப்பப்படுகின்றன. இந்த நடைமுறையில் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட்டு வந்தது.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த இத்துறைகளின் மூத்த அதிகாரிகள் சிலர், உதவியாளர்கள் அடுத்த நிலை பதவியில் நியமிக்கப்படுவதை பதவி உயர்வாகத்தான் பார்க்க வேண்டும். பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது என்று கூறி தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மாறுதல் மூலமான நியமனங்களில் இட ஒதுக்கீடு கூடாது என தீர்ப்பளித்தது.

அதன்படி, 2,000 ஆவது ஆண்டு முதல் மாறுதல் மூலமான நியமனங்களில் இட ஒதுக்கீட்டை தமிழக அரசு ரத்து செய்தது. அதை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டை விசாரித்த உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு செல்லாது என அறிவித்ததுடன், மாறுதல் மூலமான பணி நியமனங்களில் இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று 2018ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி தீர்ப்பளித்திருந்தது.

அதை எதிர்த்து அதிகாரிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு
மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. உச்சநீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்த வலியுறுத்தி வணிக வரித் துறை பணியாளர்கள் சார்பில் அளிக்கப்பட்ட மனுக்களை ஆய்வு செய்த வணிக வரித் துறை நிர்வாகம், உச்சநீதிமன்றத் தீர்ப்பு கண்டிப்பாக செயல்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்தது. இதனிடையே இந்த விவகாரம் தொடர்பான இன்னொரு வழக்கில் கடந்த 29.11.2021 அன்று தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம், 1981 முதல் 2020ஆம் ஆண்டு வரையிலான பணிமூப்பு
பட்டியலை இரு வாரங்களுக்குள் வெளியிட வேண்டும். அதன்பிறகே பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று ஆணையிட்டது. ஆனால், உயர்நீதிமன்ற தீர்ப்பு வெளியாகி 10 மாதங்கள் ஆகியும் இதுவரை பணிமூப்பு பட்டியலை வணிக வரித் துறை நிர்வாகம் வெளியிடாமல் தாமதிக்கிறது.

வணிக வரித் துறை பணியாளர்கள் அவர்களின் சட்டப்பூர்வ உரிமையைத்தான் கோருகிறார்கள். அவர்களுக்கு நியாயப்படியும், சட்டப்படியும் வழங்கப்பட வேண்டிய மாறுதல் அடிப்படையிலான நியமனம் என்ற பதவி உயர்வு கடந்த 22 ஆண்டுகளாக மறுக்கப்பட்டு வருகிறது. இதனால் பதவி உயர்வு கிடைக்காமலேயே நூற்றுக்கணக்கான பணியாளர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். மற்றொருபுறம் நீண்ட
காலமாக பதவி உயர்வு வழங்கப்படாததால், நூற்றுக்கணக்கான பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. அதனால் வணிக வரித் துறை அதிகாரிகளின் பணிச்சுமை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.

தமிழக அரசுக்கு வருவாய் ஈட்டித் தரும் முக்கியமான துறை வணிக வரித் துறை ஆகும். அத்துறையின் பணியாளர்களுக்கு உரிய பதவி உயர்வும், சமூக நீதியும் வழங்கப்படாததால், அத்துறையில் பணிச்சுமை அதிகரித்து, பணிகள் முடங்குவது வணிகவரி வசூல் உள்ளிட்ட பல விஷயங்களை பாதிக்கும். அதுமட்டுமின்றி, 22 ஆண்டுகளாக மறுக்கப்பட்டு வரும் பதவி உயர்வை உச்சநீதிமன்றம் மற்றும்
சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புகளுக்குப் பிறகும் வழங்க மறுப்பது நியாயமற்றது. தாமதிக்கப்பட்ட நீதி என்பது மறுக்கப்பட்ட நீதிக்கு ஒப்பானது என்ற பொன்மொழிக்கு இது உதாரணம் ஆகிவிடக்கூடாது.

வணிக வரித் துறை பணியாளர்களுக்கு 22 ஆண்டுகளாக மறுக்கப்பட்டு வரும் நீதியை வழங்க வேண்டிய கடமையும் பொறுப்பும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உண்டு. அதை நிறைவேற்றும் வகையில் 1981 முதல் 2020 வரையிலான வணிக வரித் துறை பணியாளர்களின் பணிமூப்பு பட்டியலை உடனடியாக வெளியிட வேண்டும். அதனடிப்படையில் அவர்களுக்குப் பதவி உயர்வு வழங்க வேண்டும் என வணிக வரித் துறைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

திமுக அரசுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சவால்

Web Editor

மதுரையில் வீட்டில் வைத்து சாராயம் காய்ச்சியவர் கைது

Web Editor

“திருடிய காவலர்கள் மீது திருட்டு வழக்குப்பதிவு செய்யாதது ஏன்?” – மனித உரிமை ஆணையம் கேள்வி!

Gayathri Venkatesan