#Samatha விவாகரத்து விவகாரம் | வருத்தம் தெரிவித்தார் தெலங்கானா அமைச்சர்!

நடிகை சமந்தாவை புண்படுத்தும் நோக்கில் அவருடைய விவாகரத்து பற்றி பேசவில்லை என அமைச்சர் கொண்டா சுரேகா செய்தியாளர்கள் சந்திப்பில் வருத்தம் தெரிவித்துள்ளார். நடிகர் நாக சைதன்யாவும், நடிகை சமந்தாவும் 7 ஆண்டுகள் காதலித்து கடந்த…

comment against Samanthawithdrawn minister

நடிகை சமந்தாவை புண்படுத்தும் நோக்கில் அவருடைய விவாகரத்து பற்றி பேசவில்லை என அமைச்சர் கொண்டா சுரேகா செய்தியாளர்கள் சந்திப்பில் வருத்தம் தெரிவித்துள்ளார்.

நடிகர் நாக சைதன்யாவும், நடிகை சமந்தாவும் 7 ஆண்டுகள் காதலித்து கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து, இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக கடந்த 2021-ம் ஆண்டு விவாகரத்து செய்வதாக அறிவித்தனர். பின்னர், நாக சைதன்யா, நடிகை சோபிதா துலிபாலாவை திருமணம் செய்து கொண்டார்.

தெலங்கானவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் கொண்டா சுரேகா, நடிகை சமந்தாவின் விவாகரத்து குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். அப்போது, தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகன் கே.டி.ஆரின் அராஜகத்தால் தான் பல நடிகைகள் விரைவிலேயே திருமணம் செய்து கொள்கிறார்கள் எனவும், நாக சைதன்யா – சமந்தா விவாகரத்துக்கு அவர் தான் காரணம் என்றும் தெரிவித்திருந்தார். அமைச்சர் கொண்டா சுரேகாவின் கருந்து ஆந்திர திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படியுங்கள் :“தனிப்பட்ட வாழ்க்கையை அரசியலுக்கு இழுப்பது தவறானது” – தெலங்கானா அமைச்சருக்கு #Jr.Ntr கண்டனம்!

நாக சைதன்யா உடனான விவாகரத்தில் எந்த அரசியல் சதியும் இல்லை என தெலங்கானா அமைச்சர் கொண்டா சுரேகாவின் குற்றச்சாட்டுக்கு நடிகை சமந்தா பதிலளித்தார். இதையடுத்து, தெலுங்கு சினிமாவை சேர்ந்த நடிகர்கள் பலரும் சமூக வலைத்தள பக்கங்களில் தங்களுடைய கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, நாக சைதன்யா, நானி, நாகர்ஜுனா, ஜூனியர் என்டிஆர் ஆகியோர், அமைச்சர் கொண்டா சுரேகா கருத்து எதிராகக் கண்டனங்களைத் தெரிவித்தனர்.

இந்நிலையில், தெலங்கானா அமைச்சர் கொண்டா சுரேகா, நடிகை சமந்தா விவாகரத்து குறித்த சர்ச்சை கருத்தைத் திரும்பப் பெற்றுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர் கூறியதாவது :

“என்னுடைய அரசியல் பயணத்தில் இதுவரை யாருடைய தனிப்பட்ட வாழ்க்கை பற்றியும் பேசியது இல்லை. நடிகை சமந்தா மற்றும் அவரது குடும்பத்தை இழிவுப்படுத்த அப்படிப் பேசவில்லை. ஆதாரம் இல்லாமல் நான் அப்படி பேசமாட்டேன். எனவே, தனது கருத்து உங்களைப் புண்படுத்தி இருந்தால், அதற்காக எனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். சமந்தாவின் உணர்வுகளைப் புண்படுத்தும் நோக்கில் அதனைச் செய்யவில்லை. நான் எனது கருத்தை நிபந்தனையின்றி திரும்பப்பெற்றேன்”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.