உயர்கல்விக்கான மாணவர் சேர்க்கைக்கு வருகிற 26ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அச்சுறுத்தலால் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அவர்களின் 10 மற்றும் 11ம் வகுப்பு இறுதிதேர்வில் எடுத்த மதிப்பெண்கள் மற்றும் 12ம் வகுப்பு செய்முறை தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில், 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று வெளியிட்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையடுத்து, கல்லூரி சேர்க்கை தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கடந்த ஆட்சியில் கௌரவ விரிவுரையாளர்களை நிரந்தரமாக்குவதற்காக அமைக்கப்பட்ட குழு, முறைகேடு காரணமாக கலைக்கப்பட்டது என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் முறையாக 22ஆம் தேதி அனுப்பி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பதை சுட்டிக்காட்டிய அவர், மாணவர்களுக்கு மதிப்பெண் சென்றடைந்தவுடன், வரும் 26ஆம் தேதி முதல் உயர்கல்விக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவித்தார்.
மேலும், ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், ஆகஸ்ட் 24ஆம் தேதி வரை மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் அவர் கூறினார்.