அணை பாதுகாப்பு மசோதா, அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் செயல்: மு.க.ஸ்டாலின்

மத்திய அரசின் அணை பாதுகாப்பு மசோதா மாநில அரசுகளின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் செயல் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூட்டாட்சித் தத்துவத்திற்கும், மாநில அரசின்…

மத்திய அரசின் அணை பாதுகாப்பு மசோதா மாநில அரசுகளின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் செயல் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூட்டாட்சித் தத்துவத்திற்கும், மாநில அரசின் அதிகாரங்களுக்கும் எதிரான அணைப் பாதுகாப்பு மசோதாவை ஒன்றிய அரசு பிடிவாதமாக நிறைவேற்றி இருப்பது கடும் கண்டனத்திற்குரியது என தெரிவித்துள்ளார்.

இந்த மசோதாவுக்கு மக்களவையிலும், மாநிலங்களவையிலும் திமுக தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்ததை சுட்டிக்காட்டிய அவர், மசோதாவை மாநிலங்களவையின் தேர்வுக்குழுவிற்கு அனுப்ப வேண்டும் என்று திமுக சார்பில் கொடுத்த திருத்தத்தை மற்ற எதிர்க்கட்சிகளும் ஆதரித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், மசோதாவை தேர்வுக் குழுவிற்கு அனுப்பாமல், தங்களுக்கு உள்ள பெரும்பான்மையைப் பயன்படுத்தி, சட்டத்தை பா.ஜ.க. அரசு கொண்டு வந்திருப்பது “ஒன்றிய – மாநில அரசுகளுக்கு” இடையிலான உறவில் மிகப்பெரும் சறுக்கலாக அமைந்திருப்பதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஜனநாயக – நாடாளுமன்ற மரபுகளுக்கோ, அரசியல் சட்டத்திற்கோ துளியும் மதிப்பளிக்காமல் மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிக்கும் ஒன்றிய அரசின் செயல் மிகவும் சர்வாதிகாரமானது என்றும் ஜனநாயகத்திற்கு ஆபத்தானது என்றும் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர்,

அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் ஒன்றிய பா.ஜ.க. அரசு மக்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய காலம் வெகு தொலைவில் இல்லை என தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.