தமிழ்நாட்டிற்கு கூடுதல் ஒதுக்கீடாக 1 கோடி தடுப்பூசிகளை வழங்க வேண்டுமென பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு உள்ளிட்ட 6 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக இன்று ஆலோசனை மேற்கொண்டார். அதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “கொரோனா பெருந்தொற்றைச் சமாளிக்கும் கடினமான பணியை, புதிதாகப் பொறுப்பேற்ற ஓர் அரசு எதிர்கொள்ள வேண்டிய நிலை இருந்த ஒரே பெரிய மாநிலம் தமிழ்நாடுதான். எனது அரசு இச்சவாலை எதிர்கொண்டு, உயிரிழப்புகளைக் குறைத்து, நோய்த்தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது” என்று தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசின் விழிப்புணர்வு காரணமாக மாநிலத்தில் தடுப்பூசிக்கான தேவை மிகவும் அதிகரித்துள்ளது. எனினும், பிற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழ்நாட்டிற்கான ஒதுக்கீடு மிகவும் குறைவாகவே உள்ளது எனவும், இந்த நெருக்கடியைச் சமாளிக்க, சிறப்பு ஒதுக்கீடாக ஒரு கோடி தடுப்பூசிகளை வழங்க வேண்டும் எனவும் பிரதமருக்கு முதலமைச்சர் கோரிக்கை வைத்தார்.
கொரோனா மூன்றாம் அலையை எதிர்கொள்வதற்கு ஏதுவாக, மாநிலங்களுக்கு மேலும் பல உதவிகளை ஒன்றிய அரசு வழங்கிட வேண்டும் என்றும், பள்ளி – கல்லூரிகள் மூடப்பட்டு இருக்கும் சூழலில், நீட் போன்ற தேசிய அளவிலான தேர்வுகளை நடத்துவது தொற்றுப் பரவலுக்கு வழி வகுத்துவிடலாம். எனவே, பிரதமர் இம்முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும் எனவும் வலியுறுத்தினார்.







