பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவையொட்டி,சென்னை நந்தனத்தில் அவரின் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
திமுக மூத்த தலைவர்களில் ஒருவரான மறைந்த பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு பிறந்தநாள் தொடக்கவிழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, சென்னை நந்தனம் ஒருங்கிணைந்த நிதித்துறை வளாகத்திற்கு பேராசிரியர் க.அன்பழகன் மாளிகை என முதலமைச்சர் பெயர் சூட்டினார்.
பல்வேறு அரசு துறை அலுவலகங்கள் ஒருங்கிணைந்து செயல்படும் இந்த வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பேராசிரியர் அன்பழகன் சிலையையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். பின்னர், நாட்டுடமையாக்கப்பட்ட பேராசிரியர் அன்பழகனின் நூல்களுக்கான நூலுரிமைத் தொகையை அவரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து, சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகன் இல்லத்திற்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார். அப்போது, பேராசிரியர் குடும்பத்தினர், அமைச்சர்கள் பொன்முடி, சேகர்பாபு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.







