முதலமைச்சர் தனது இல்லத்திலிருந்து தலைமைச்செயலகம் செல்லும் சாலைகளில் அதிக எண்ணிக்கையில் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவதை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முதலமைச்சர் தனது இல்லத்திலிருந்து தலைமைச்செயலகம் செல்லும் வழியில் பாதுகாப்பிற்காக காவலர்கள் நிற்பது வழக்கம். அத்துடன், முதலமைச்சர் செல்லும் நேரத்தில் அவர் விரைவாக சென்று சேர வேண்டும் என்பதற்காக போக்குவரத்து சற்று நேரம் நிறுத்தப்படும். ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முதலமைச்சராக இருந்த காலத்தில் இது பின்பற்றப்பட்டது. ஆனால், அதனை தவிர்த்து மக்களுடன் பயணித்து வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
இந்த நிலையில் சாலைகளில் அதிக எண்ணிக்கையில் காவலர்கள் நிற்பதை தவிர்ப்பதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இதனையடுத்து காவலர்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.
சாலைகளின் சந்திப்புகளில் மட்டும் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள் எனவும், போராட்டங்கள் நடைபெறும் நாட்களில் வழக்கமான முறையில் பாதுகாப்புப் பணிகளில் காவலர்கள் ஈடுபடுவார்கள் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சாலைகளில் தனது பாதுகாப்பிற்காக பெண் காவலர்கள் நிற்பதையும் நிறுத்தியவர் மு.க.ஸ்டாலின் என்பது குறிப்பிடத்தக்கது.







