காலநிலை மாறுபாடு பெரிய அச்சுறுத்தலாக மாறிவருகிறது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை தரமணியில் உள்ள எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிலையத்தில் காலநிலை மாற்றம் மற்றும் உணவு, ஊட்டச்சத்து தொடர்பான பன்னாட்டு கருத்தரங்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், திமுக ஆட்சியில் இயற்கை வேளாண்மை மீது தனி கவனம் செலுத்தப்படுவதாகக் கூறினார்.
வரலாற்றில் முதன் முறையாக வரும் 14 ஆம் தேதி வேளாண்மை துறைக்கு என தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய உள்ளதாகக் கூறிய அவர், உழவர் சந்தைகளுக்கு புத்துயிர் அளித்தல், கிராமச் சந்தைகளை அமைப்பதற்கான நடவடிக்கை, நிலத்தடி நீர் பயன்பாட்டை பராமரிப்பதற்கான நடவடிக்கைகள், சென்னை பெருநகரத்தை வெள்ள நீர் சூழாமல் தவிர்க்க பெருநகர வெள்ளநீர் மேலாண்மை குழு அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காலநிலை மாற்றம் என்பது தற்போது மானுடத்தின் மிகப் பெரிய பிரச்சினையாக உள்ளதாகத் தெரிவித்தார். இந்த காலநிலை மாற்றத்தை முன்கூட்டியே உணர்ந்து சொன்ன அறிஞர்தான் எம்.எஸ்.சுவாமிநாதன் என தெரிவித்தார். காலநிலை மாறுபாடு பெரிய அச்சுறுத்தலாக மாறிவருவதாக தெரிவித்த முதலமைச்சர் அதனால் ஏற்படும் பாதிப்புகள் நாளுக்குநாள் அதிகரித்துவருவதாகவும் தெரிவித்தார். மேலும் காலநிலை மாற்றம் மானுடத்தின் முக்கியமான பிரச்சினையாக தமிழ்நாடு அரசு கருதுவதாக தெரிவித்த அவர், அதற்கான நடவடிக்கைகளை ஆராய்ந்து மேற்கொள்வோம் எனவும் தெரிவித்தார்.
மேலும் இயற்கையை சீரழித்துவிடாமல், சீர் செய்யும் கடமை நமக்கு உள்ளது என்றும், இதற்கான ஆலோசனைகளை சூழலியல் அறிஞர்கள் அனைவரும் அரசுக்கு தரவேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார். திறந்த மனதோடு அதனை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயாராக இருக்கிறது என உறுதியளிப்பதாகவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.








