கேரளாவில் பள்ளி மாணவர்களிடையே மோதல் – 10ம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு!

கேரளாவில் டியூசன் சென்டரில், இருபள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் 10ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் உயிரிழந்தார்.

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள எம்ஜே மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார் முகமது ஷாபாஸ் (15). இவர் கீழக்கோத் கிராமத்தில் உள்ள தனியார் டியூசன் சென்டரில் பயிற்சி பெற்று வந்துள்ளார். இந்நிலையில் இந்த டியூசன் சென்டரில் பிப்.23ஆம் தேதி பிரியாவிடை நிகழ்ச்சி நடந்துள்ளது.

இந்நிகழ்ச்சியில் அங்கு பயின்று வரும் MJHSS மற்றும் தாமரச்சேரி GVHSS மாணவர்களிடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் தொடர்ந்த நிலையில், கடந்த வியாழன்கிழமை இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இதில் காயமடைந்த முகமது ஷாபாஸ் கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை 1 மணியளவில் உயிரிழந்தார். இதனையடுத்து சம்பந்தப்பட்ட மாணவர்களிக்கிடையேயான வாட்ஸ் அப் மற்றும் இன்ஸ்டாகிராம் மெசேஜ்களை வைத்து இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், 5 மாணவர்களை கைது செய்து, சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். கோழிக்கோடு துணைக் கல்வி இயக்குநர் முதற்கட்ட தகவல் அறிக்கையை சமர்பித்தார்.

துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து துறை ரீதியான விசாரணைக்கு கல்வி அமைச்சர் வி. சிவன்குட்டி உத்தரவிட்டுள்ளார். இந்த விவகாரம் குறித்து விரிவான விசாரணை நடத்த பொதுக் கல்வி இயக்குநர் நியமிக்கப்பட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.