உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தேவாலயங்களில் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடும் வகையில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெறுகின்றன. அதோடு புத்தாடைகள், இனிப்புகள், பரிசுப்பொருட்கள் உள்ளிட்டவற்றின் விற்பனை களைகட்டியுள்ளது. இந்த நிலையில் நாட்டு மக்களுக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
“நாட்டு மக்களுக்கு, குறிப்பாக கிறிஸ்தவ சகோதர, சகோதரிகளுக்கு எனது நெஞ்சார்ந்த கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். கிறிஸ்துமஸ் என்பது மகிழ்ச்சி மற்றும் உற்சாகத்தின் பண்டிகை. அது அன்பு மற்றும் கருணையின் செய்தியை உலகிற்கு சொல்கிறது. மனித குலத்தின் நன்மைக்காக இயேசு கிறிஸ்து செய்த தியாகத்தை கிறிஸ்துமஸ் நினைவுபடுத்துகிறது.
இந்த புனிதமான பண்டிகை அமைதி, சமத்துவம், சமாதானம் மற்றும் சேவையின் மதிப்புகளை பறைசாற்றி, நம்மை ஊக்கப்படுத்துகிறது. இயேசு கிறிஸ்து நமக்கு காட்டிய பாதையை பின்பற்றி, அன்பு மற்றும் பரஸ்பர சமாதானம் நிறைந்த ஒரு சமுதாயத்தைக் கட்டியெழுப்புவதற்காக உழைக்க வேண்டும் என அனைவரும் உறுதியேற்போம்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தியில், “அனைவருக்கும் அமைதி, இரக்கம், நம்பிக்கை நிறைந்த மகிழ்ச்சியான கிறிஸ்துமஸ் வாழ்த்துகள். இயேசு கிறிஸ்துவின் போதனைகள் நம் சமூகத்தில் நல்லிணக்கத்தை வலுப்படுத்தட்டும்”. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.







