சீனாவில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் காரணமாக அந்நாட்டின் பொருளாதாரம் சரிந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து, அந்நாட்டின் பல பகுதிகளில் முழுமையான பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. சில பகுதிகளில் பகுதி அளவிலான பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கடந்த மார்ச் முதல் 2.5 கோடிக்கும் அதிமான மக்கள் கொரோனா பொதுமுடக்க கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு வாழ்ந்து வருகிறார்கள்.
இதனால், கடந்த ஆண்டின் ஏப்ரல் மாதத்தோடு ஒப்பிடும்போது இந்த ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் சில்லறை வர்த்தகம் 11.10 சதவீதம் சரிந்துள்ளதாக சீன தேசிய புள்ளிவிவர ஆணையம் தெரிவித்துள்ளது.
பல பகுதிகளில் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதால் அவற்றின் உற்பத்தி தேசிய அளவில் 5 சதவீதம் அளவுக்கு சரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக வேலை இழப்பு அதிகரித்துள்ளதாகவும், வேலையிழந்தவர்களின் சதவீதம் கடந்த ஏப்ரலில் 6.1 சதவீதமாக உயர்ந்துள்ளதாகவும், கடந்த பிப்ரவரி 2020க்குப் பிறகு முதல்முறையாக இந்த அளவிற்கு உயர்வு காணப்படுவதாகவும் சீன தேசிய புள்ளிவிவர ஆணையம் தெரிவித்துள்ளது.









