“சில்லுனு ஒரு காதல்” – சிறு வயது நட்பிலிருந்து காதலாக மாறிய ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சண்ட் காதல் கதை…

சிறு வயது நட்பிலிருந்து காதலாக மாறிய ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் ஜோடி விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானியின் இளைய…

சிறு வயது நட்பிலிருந்து காதலாக மாறிய ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் ஜோடி விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி,  ராதிகா மெர்ச்சண்ட்டை விரைவில் திருமணம் செய்ய உள்ளார்.  மார்ச் 1 முதல் மார்ச் 3 வரை குஜராத்தின் ஜாம்நகரில் உள்ள ரிலையன்ஸ் ரிஃபைனரி வளாகத்தில் திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.  இதைத் தொடர்ந்து,  ஆனந்த் – ராதிகா திருமணம் ஜூலை 12ஆம் தேதி மும்பையில் நடைபெறவுள்ளது.

விருந்தினர் பட்டியலிலிருந்து நிகழ்வு நடைபெறும் இடம் வரை,  அனைவரும் திருமணம் தொடர்பான அனைத்து தகவல்களை அறிய விரும்புகிறார்கள்.  இந்த திருமணம் குறித்து நாடு மட்டுமின்றி வெளிநாட்டு ஊடகங்களும் பரபரப்பாக பேசுகின்றன.  ராதிகாவும் ஆனந்தும் ஒருவரையொருவர் நீண்ட நாட்களாக அறிந்தவர்கள்.  இவர்களின் பள்ளிப் பருவத்தில் தொடங்கிய நட்பு பின்னர் காதலாக மாறி தற்போது திருமணத்தில் வந்து நிற்கிறது.

ராதிகா மெர்ச்சண்ட் பற்றி தெரிந்து கொள்வோம்….

வீரேன் மற்றும் ஷைலா மெர்ச்சண்ட்டின் மூத்த மகள் ராதிகா.  இவர் டிசம்பர் 18,  1994 இல் பிறந்தார்.  ராதிகாவின் தந்தை பல தொழில்களை நடத்தி வருகிறார் மற்றும் இன்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார்.  ராதிகாவுக்கு அஞ்சலி மெர்ச்சண்ட் என்ற தங்கையும் உள்ளார்.  ராதிகா மும்பையில் பள்ளிப் படிப்பை முடித்தார்.  அவர் ஜான் கானான் பள்ளி மற்றும் எகோல் மொண்டியல் வேர்ல்ட் ஸ்கூல் ஆகியவற்றில் படித்தார்.

ராதிகா மேற்படிப்புக்காக நியூயார்க் சென்றார்.  நியூயார்க் பல்கலைக்கழகத்தில் அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றவர்.  இந்தியா வந்த பிறகு,  ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.  ராதிகா படிப்பில் பிரகாசமான மாணவி.  படிப்பைத் தவிர,  நீச்சல்,  மற்றும் மலையேற்றம் அவருக்கு பிடிக்கும்.

இன்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் ராதிகா உள்ளார்.  அவரது தந்தை இன்கார் நேச்சுரல் பாலிமர்ஸ்,  இன்கார் பிசினஸ் சென்டர்,  இன்கார் பாலிஃப்ராக் தயாரிப்புகள்,  ZYG பார்மா மற்றும் சைந்தர்ஷன் வணிக மையங்கள் மற்றும் பலவற்றை நடத்தி வருகிறார்.

ராதிகாவுக்கு நடனம் மிகவும் பிடிக்கும்.  அவர் ஒரு பாரம்பரிய நடனக் கலைஞர். மும்பையில் உள்ள ஸ்ரீ நிபா ஆர்ட்ஸ் டான்ஸ் அகாடமியின் குரு பவன் தக்கரிடம் முறையான பயிற்சி பெற்றார்.

ராதிகா மெர்ச்சண்ட் – ஆனந்த் அம்பானி காதல்:

ராதிகாவும் ஆனந்தும் ஒருவரையொருவர் சிறுவயதிலிருந்தே அறிவார்கள் என்பது வெகு சிலருக்கே தெரியும்.  ஆரம்பத்தில் இருவரும் நண்பர்களாக இருந்தனர்.  2018 ஆம் ஆண்டில், அவர்கள் ஒருவரையொருவர் காதலிப்பதை தெரிவிக்கும் வகையில் புகைப்படம் ஒன்றை ஆன்லைனில் பதிவிட்டனர்.

அதன் பின்னர்,  அம்பானி குடும்பத்தின் தனிப்பட்ட கூட்டங்களில் ராதிகா அடிக்கடி காணப்பட்டார்.  அவர் 2018-ல் இஷா அம்பானி மற்றும் ஆனந்த் பிரமல் திருமணத்தில் கலந்து கொண்டார்.  மேலும் 2019-ல் ஆகாஷ் அம்பானி மற்றும் ஷ்லோகா மேத்தாவின்  திருமணத்திலும் கலந்து கொண்டார்.

ஜூன் 2022 இல்,  பயிற்சி பெற்ற பரதநாட்டிய நடனக் கலைஞரான தங்களின் மருமகள் ராதிகாவுக்கு அம்பானி குடும்பத்தினர் அரங்கேற்ற விழாவை நடத்தினர்.  மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் சென்டரில் இந்த நிகழ்ச்சி நடந்தது.

இதையடுத்து, 29 டிசம்பர் 2022 அன்று ராதிகா மெர்ச்சண்ட்  –  ஆனந்த் அம்பானி நிச்சயதார்த்தம் நடைபெற்றது.  இந்நிலையில், ஆனந்த்-ராதிகாவின் திருமணத்திற்கு முந்தைய விழாவிற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.

பிரபலங்கள் பங்கேற்பு:

மேலும்,  ஷாருக்கான் முதல் மகேந்திர சிங் தோனி போன்ற பிரபலங்கள் இந்த பிரமாண்ட விழாவில் பங்கேற்க்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  குறிப்பாக, இதில் அமீர்கான், சல்மான் கான்,  அக்‌ஷய் குமார்,  ரஜினிகாந்த்,  அஜய் தேவ்கன்,  கஜோல்,  ரன்வீர் சிங்,  தீபிகா படுகோன்,  ரன்பீர் கபூர்,  ஆலியா பட்,  விக்கி கௌஷல்,  கத்ரீனா கைஃப்,  கரண் ஜோஹர்,  சைஃப் அலி கான்,  வருண் தவான் மற்றும் சித்தார்த் ஆகியோரின் பெயர்கள் இந்த பட்டியளில் அடங்கும்.

இதுமட்டுமின்றி,  விளையாட்டு நட்சத்திரங்களான சச்சின் டெண்டுல்கர், எம்எஸ் தோனி, ரோஹித் சர்மா,  கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா, இஷான் கிஷான் ஆகியோரும் இந்த பிரம்மாண்ட விழாவில் பங்கேற்கவுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.