வரதட்சணை கொடுமைகள் பற்றி பேசும்போது திருமணத்திற்காக பெண்களை மாட்டை விலை பேசுவதை போல் விலைபேசுவதா என கண்டனக் குரல்கள் எழுவதுண்டு. அதனையும் மிஞ்சும் அவலமாக தெற்கு சூடானில் திருமணச் சந்தையில் மாட்டிற்காகவே பெண்களை விலை பேசி விற்கும் கொடுமை அரங்கேறி வருகிறது.
உலக அளவில் குழந்தை திருமணங்கள் அதிக அளவில் நடைபெறும் நாடுகளில் 5வது இடத்தில் உள்ளது தெற்கு சூடான். இப்படி அதிக அளவில் நடைபெறும் குழந்தை திருமணங்களால் அந்நாட்டு பெண்களில் மூன்றில் ஒருவர், தான் 15 வயதை அடையும் முன்பே கர்ப்பம் தரிப்பதாக யூனிசெஃப் வெளியிட்டுள்ள புள்ளி விவரம் ஒன்று தெரிவிக்கிறது. இப்படி குழந்தை பருவத்திலேயே கர்ப்பம் தரிப்பது அதிக அளவு நிகழ்வதால் தெற்கு சூடான் மற்றொரு ஆபத்தான புள்ளி விவர பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. ஆம்…. உலகிலேயே பிரசவத்தின்போது கர்ப்பிணிகள் மரணம் அடையும் சோகம் சூடானில்தான் அதிக அளவு நிகழ்கிறது. அங்கு சராசரியாக நிகழும் ஒரு லட்சம் பிரசவங்களில், 1150 கர்ப்பிணிகள் மரணம் அடைகின்றனர்.
திருமணச் சந்தையில் மாடுகளுக்காக குழந்தைகளை விலைபேசி விற்கும் அளவிற்கு தெற்கு சூடானில் நிலவும் அவலம்தான் அந்நாட்டை இது போன்ற மோசமான முன்னுதாரணங்களுக்கு உள்ளாக்கியுள்ளது, அந்நாட்டில் தொடக்கப்பள்ளிக்கு செல்லும் குழந்தைகளின் எண்ணிக்கையே 10 சதவீதம்தான். தெற்கு சூடானின் பல்வேறு கிராமப்புற பகுதிகளில், பள்ளிக்குச் சென்று படிக்க வேண்டும் என்கிற கனவில் குழந்தைகள் இருக்கும்போதே, அந்த கனவை பலிகொடுத்து திருமண பந்தத்தில் வலுக்கட்டாயமாக தள்ளிவிடுகிறார்கள் பெற்றோர்கள். குழந்தைகளை விற்கும் வர்த்தகமும் திருமணம் என்கிற வைபவமும் அங்கே ஒன்றாகவே அரங்கேறுகிறது. சிறுமிகளுக்கு கிடைக்கும் வரவேற்பிற்கு ஏற்ப அவர்களை 50 மாடுகள், 100 மாடுகள், 200 மாடுகள் என மாப்பிள்ளை வீட்டாரிடம் ஏலம் விட்டு பெற்றுக்கொண்டு திருமணச்சந்தையில் பெற்றோர்கள் விற்றுவிடுவதாக குழந்தை திருமணங்கள் குறித்து ஆராயும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
திருமணம் செய்துகொள்ளமாட்டேன், பள்ளிக்கூடம்தான் செல்வேன் என அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு கல்விக் கட்டணத்தை செலுத்துவதில்லை பெற்றோர். அத்தோடு பல்வேறு விதத்தில் நூதன தண்டனைக்கொடுத்தும், அவர்களை திருமணத்தை நோக்கி தள்ளிவிடுவார்களாம். அரசு அறிவிப்புபடி தெற்கு சூடானில் 18 மற்றும் அதற்கு மேல் வயது உள்ளவர்கள்தான் திருமணம் செய்துகொள்ளவேண்டும். ஆனால் கிராமப்புற மக்கள் இந்த சட்டத்தை மதிப்பதில்லை. அவர்களின் கலாச்சாரம் சார்ந்த சில மூடப்பழக்கவழக்கங்கள் இதற்கு ஒரு காரணமாக கூறப்பட்டாலும் வறுமைதான் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. 2011ம் ஆண்டிலேயே சூடானிலிருந்து தெற்கு சூடான் சுதந்திரம் அடைந்திருந்தாலும் அங்கு தற்போது வரை வறுமை ஓயவில்லை. அடிக்கடி நடைபெறும் உள்நாட்டு கலவரங்கள் போன்றவை இதற்கு காரணமாக கூறப்படுகிறது. இந்த வறுமையிலிருந்து தப்பிக்கவும், வாழ்க்கையில் எளிதாக செட்டிலாகும் வழியாகவும் குழந்தைகளை திருமணச் சந்தையில் பெற்றோர்கள் விற்பதாக குற்றம்சாட்டப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 520 மாடுகள் மற்றும் ஒரு கார் என கொடுத்து ஏலம் எடுக்கப்பட்ட சிறுமியின் திருமணம், உலகம் முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. எனினும் தற்போதும் அங்கு குழந்தை திருமண ஏலங்கள் தொடரத்தான் செய்கின்றன.
குழந்தை திருமணங்களை தடுக்க அரசு தீவிர முயற்சி மேற்கொண்டாலும், இந்த பிரச்னைக்கு முடிவுகட்டவேண்டிய கூட்டுப்பொறுப்பு அனைவருக்கும் உண்டு என்கிறார் தெற்கு சூடானின் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் அயா பெஞ்சமின். குழந்தைகள் தங்கள் குழந்தை பருவத்தை முழுமையாக அனுபவிக்கவிட்டு அவர்கள் தங்கள் வாழ்க்கையை தாங்களே தீர்மானிக்க அனுமதிக்க வேண்டும் என அவர் பொதுமக்களை கேட்டுக்கொண்டார். போப் பிரான்சிஸ் அடுத்த மாதம் தெற்கு சூடான் செல்லும்போது குழந்தை திருமணம் எனும் மனித உரிமை மீறலுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்கிற கோரிக்கையும் எழுந்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபை குழந்தை திருமணங்களை வரும் 2030ம் ஆண்டிற்குள் உலகைவிட்டே அகற்ற வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துள்ள நிலையில் அந்த இலக்கை நிறைவேற்ற தெற்கு சூடானில் அதிக சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும். பெண்களின் கனவு, ஆரோக்கியம், சுதந்திரம் என பலவற்றை பலி கொடுத்து அரங்கேறும் குழந்தை திருமணங்கள் உலகிலிருந்து முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக இருக்கும்.
– இலட்சுமணன்







