தலைமைச் செயலாளரைப் பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

தலைமைச் செயலாளர் வெ.இறையன்புவின் நடவடிக்கைகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  பாராட்டு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 30.1.2023 அன்று தலைமைச் செயலகத்தில், சிறுபான்மையினர் நலனுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்கள், தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் செயல்பாடுகள், வக்ஃப்…

தலைமைச் செயலாளர் வெ.இறையன்புவின் நடவடிக்கைகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  பாராட்டு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 30.1.2023 அன்று தலைமைச் செயலகத்தில், சிறுபான்மையினர் நலனுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்கள், தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் செயல்பாடுகள், வக்ஃப் சொத்துகளை பாதுகாத்தல், தனியார் சொத்துகளைப் பதிவு செய்வதில் ஏற்பட்டுள்ள இடையூறுகள் ஆகியவை குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அவர்கள் சிறுபான்மையினருக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில், வக்ஃப் சொத்துகள் பாதுகாத்தல் மற்றும் தனியார் சொத்துகளைப் பதிவு செய்வதில் ஏற்பட்டுள்ள இடையூறுகள் குறித்து தலைமைச் செயலாளர் தலைமையில், வருவாய்த் துறை செயலாளர், வணிக வரி மற்றும் பதிவுத் துறை செயலாளர், நில நிர்வாக ஆணையர் மற்றும் பதிவுத் துறை தலைவர் ஆகியோருடன் 29.11.2022 அன்று நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் எடுக்கப்பட்ட பின்வரும் முடிவுகளின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டது.

1. வக்ஃபு வாரியத்தின் தரவுகள் குறிப்பிட்ட காலத்திற்குள் புதுப்பிக்கப்பட வேண்டும். வருவாய் பதிவேடுகளுடன் தரவுகள் ஒத்திசைவு செய்யப்பட வேண்டும்.

2. வருவாய்த்துறை பதிவேடுகள் மற்றும் வக்ஃபு வாரிய பதிவேடுகளில் சிறிய வேறுபாடுகள் இருப்பின், மாவட்ட ஆட்சியர் அளவில் தீர்வு செய்யப்பட வேண்டும்.

3. மேற்படி வேறுபாடுகள் களைந்த பிறகு, பதிவேடுகள் புதுப்பிக்கப்பட வேண்டும்.

4. மாவட்ட அளவில் வருவாய் / வக்ஃபு பதிவேடுகளில் பெரிய அளவில் சிக்கல்கள் / வேறுபாடுகள் இருப்பின் அத்தகைய வழக்குகளை நில நிர்வாக ஆணையர் / நில அளவைத் துறைக்கு (Survey and Settlement) / அரசிற்கு பரிந்துரைக்கப்பட வேண்டும்.

5. வக்ஃபு வாரியம் மற்றும் வருவாய்த் துறையின் சட்ட நிலைப்பாட்டில் பெரிய வேறுபாடுகள் இருந்தால் அல்லது சட்டத் துறையின் விளக்கம் தேவைப்பட்டால் அத்தகைய வழக்குகளை பொருத்தமான முடிவுகள் எடுப்பதற்காக மாநில அரசிற்கு பரிந்துரைக்கலாம்.

முதலமைச்சர், தலைமைச் செயலாளர் அவர்களின் மேற்கண்ட நடவடிக்கைகளை பாராட்டியதுடன் அதனை தொடர்ந்து செயல்படுத்துமாறு அறிவுறுத்தினார். இந்த ஆய்வுக் கூட்டத்தின் நிறைவாக முதலமைச்சர், தமிழ்நாடு அரசு சிறுபான்மையின மக்களின் நலனில், வக்ஃப் வாரிய செயல்பாடுகளில் அக்கறை கொண்டுள்ளது எனத் தெரிவித்தார். கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட பிரச்சனைகளுக்கு குறிப்பாக நிலம் தொடர்பான பிரச்சனைகளுக்கு வருவாய்த் துறையுடன் இணைந்து செயலாற்றி தீர்வு காண வேண்டும் எனவும், ஒன்றிய, மாநில அரசுகள் மூலமாக வழங்கப்படும் நிதிகள் முறையாக செலவிடப்பட்டு, சிறுபான்மையின மக்கள் மேம்பாட்டிற்காகவும், வக்ஃப் வாரியத்தின் நிதி நிலையை செம்மைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தினார்.

மேலும், சிறுபான்மையினர் நலன்களுக்காக இத்துறை பல்வேறு நடவடிக்கைகளை சிறப்பாக எடுத்து வருகிறது என்றும், அதனை ஆவணப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.