ரூ.111 கோடி மதிப்பில் கட்டப்பட்ட 840 குடியிருப்புகளை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை, கொளத்தூரில், தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் கௌதமபுரம் திட்டப் பகுதியில் கட்டப்பட்டுள்ள 840 அடுக்குமாடி குடியிருப்புகளை திறந்து வைத்து பேசியதாவது: தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு…

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை, கொளத்தூரில், தமிழ்நாடு நகர்ப்புர
வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் கௌதமபுரம் திட்டப் பகுதியில்
கட்டப்பட்டுள்ள 840 அடுக்குமாடி குடியிருப்புகளை திறந்து வைத்து பேசியதாவது:

தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் கட்டப்பட்ட
புதிய அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டடங்களை இன்று நான் உங்கள் மத்தியில்
திறந்து வைத்திருக்கிறேன். 111 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில்
உருவாக்கப்பட்டிருக்கக்கூடிய கட்டடத்தை திறந்து வைத்திருக்கிறேன். 840
குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டு இன்று குடியிருப்புதாரர்களுக்கு வீடு
ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கப்பட்டிருக்கக்கூடிய நிலையில், இந்த கட்டடத்தை நான்
திறந்து வைத்திருக்கிறேன்.

நம்முடைய நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு பேசுகிறபோது
ஒரு கருத்தை எடுத்துச் சொன்னார். தமிழ்நாட்டில் எங்குதான் நம் முதலமைச்சர்
சுற்றிக் கொண்டிருந்தாலும், இந்த கொளத்தூர் தொகுதி என்றால் அவருக்குத் தானாக
ஒரு உற்சாகம் வந்துவிடும், ஒரு மகிழ்ச்சி வந்துவிடும். உண்மைதான், ஏன் வராது?

மூன்று முறை என்னை தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள். தொடர்ந்து உங்கள் வீட்டுப்
பிள்ளையாக நினைத்து, அது எதிர்க்கட்சியாக இருந்தாலும், ஆளுங்கட்சியாக
இருந்தாலும், என்னை ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று பார்க்காமல் உங்களில்
ஒருவனாக நினைத்து, என்னைத் தொடர்ந்து வெற்றிபெற வைத்திருக்கிறீர்கள். ஆக,
அப்படிப்பட்ட உங்களைச் சந்திக்க வரும்போது எனக்கு மகிழ்ச்சி தானாக
வந்துவிடும், ஒரு எழுச்சியும் வந்துவிடும்.

சில நேரங்களில் எனக்கு சோர்வு ஏற்பட்டால், இந்தப் பகுதிக்கு வந்தவுடன் அந்த சோர்வெல்லாம் உடனடியாக கலைந்து போய்விடும். ஆகவே, அப்படிப்பட்ட இந்தக் கொளத்தூர் தொகுதியில் இருக்கக்கூடிய உங்களையெல்லாம் சந்திக்க வந்திருப்பதில் நான் தொடர்ந்து மகிழ்ச்சி அடைந்து கொண்டிருக்கக் கூடியவன்.

குடிசை மாற்று வாரியம் என்ற ஒரு அமைப்பை இந்தியாவிலேயே முதன் முதலில் ஏற்படுத்தியது தலைவர் கலைஞர் அவர்கள்தான். அன்றைக்கு மத்திய அமைச்சராக இருந்த, பெருந்தலைவர் பாபுஜி என்று அழைக்கப்படக்கூடிய ஜகஜீவன்ராமை வரவழைத்து அந்தக்
கட்டடத்தை திறந்து வைத்தார்.

அதற்கு முன்னால், இந்த நாட்டிற்கு விடுதலையைத் தேடித் தந்திருக்கக்கூடிய ஒருவராக இருந்த ஜே.பி. என்று சொல்லக்கூடிய ஜெயப்பிரகாஷ் நாராயணனையும் அழைத்து வந்து அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வைத்தார் என்பது வரலாறு.

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்ற பேரறிஞர் அண்ணாவின் வழித்தோன்றலாக கலைஞர் அந்தத் திட்டத்தை அன்றைக்கு செயல்படுத்திக் காட்டினார்.
இன்றைக்கு அதே திட்டம் பெயர் மாற்றம் செய்யப்பட்டு தமிழ்நாடு நகர்ப்புர
வாழ்விட மேம்பாட்டு வாரியம் என்ற பெயரை தாங்கி, இந்த கட்டடங்கள் திறந்து
வைக்கப்பட்டிருக்கிறது.

இன்றைய தினம் 840 குடும்பங்கள், அந்த குடும்பங்களின் வாழ்வில் ஒரு மலர்ச்சி
ஏற்பட்டிருக்கிறது. ஒரு பழமொழி சொல்வார்கள் – கல்யாணம் பண்ணிப் பார், வீட்டைக் கட்டிப் பார் – என்று. ஏனென்றால் அவ்வளவு சிரமம். இப்போது கல்யாணம் ரிஜிஸ்டர் அலுவலகத்தில் நடந்துவிடுகிறது, அவரவர்களே முடிவு செய்து கல்யாணம் செய்து கொள்கிறார்கள். அது ஒன்றும் இப்போது அவ்வளவு கஷ்டம் இல்லை. ஆனால் ஒரு காலத்தில் அந்த பழமொழி- கல்யாணம் பண்ணிப் பார், வீட்டைக் கட்டிப் பார் – என்று சொல்வார்கள், அவ்வளவு கஷ்டம்.

உண்ண உணவு –
உடுக்க உடை –
இருக்க வீடு –
அனைவர்க்கும் கல்வி –
அனைவர்க்கும் வேலை –
வாழ்க்கைக்குத் தன்மானம் –
நாட்டுக்கு இனமானம்

ஆகியவற்றை ஊட்டுவதற்கான உருவாக்கியிருக்கக்கூடிய ஆட்சியாகத்தான் இன்றைக்கு
திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை
நீங்களெல்லாம் நன்கு அறிவீர்கள் என்றார் முதல்வர் ஸ்டாலின்.

இதனிடையே, சென்னை பெருநகர காவல் மூலமாக பள்ளி மாணவர்களை நல்வழிப்படுத்தும் சிற்பி திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார்.

காவல்துறையினரின் முயற்சிகளில் மாணவர்களை ஈடுபடுத்தும் பிரிவாக (SIRPI-Students in Responsible Police Initiatives) சிற்பி என்ற திட்டமானது தொடங்கப்படவுள்ளது. சென்னை பெருநகர காவல் மூலாமாக செயல்படுத்தப்படவுள்ள இத்திட்டத்திற்காக ஒருங்கிணைப்பு அதிகாரிகளும் நியமிக்கப்படவுள்ளனர். திட்டத்தில் இணையும் மாணவ மாணவியர்களுக்கு சீருடைகளும் வழங்கப்படவுள்ளது. செப்டம்பர் 14 ஆம் தேதி காலையில் கலைவாணர் அரங்கில் நடைபெறும் நிகழ்வில் சிற்பி திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கின்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.