சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக ஆட்சியில் கொலை, கொள்ளை, பாலியல்…

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக ஆட்சியில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருவதால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து வருவதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும், கடந்த 8 மாத திமுக ஆட்சியில் தமிழர்களின் உயிருக்கும், உடைமைக்கும் ஆபத்து ஏற்பட்டு வரும் நிலையில், காவல்துறையினருக்கும் பாதுகாப்பு இல்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏலச்சீட்டு மோசடி தொடர்பான புகாரில் வேலூர் காவல் சார் ஆய்வாளர் சீனிவாசனுக்கு மிரட்டல் விடுக்கும் வைரல் ஆடியோ, காவல்துறையினரை குற்றம் செய்ய திமுக தூண்டுகிறதா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். சட்டம் ஒழுங்கை கையில் வைத்திருக்கும் முதலமைச்சரின் துறையிலேயே இதுபோன்ற அராஜக செயல்கள் நடைபெறுகிறது என்றால், மற்ற துறைகளின் நிலை கேட்கவே வேண்டாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசு அதிகாரிகளையும், காவல்துறையினரையும் மிரட்டுவதை உடனடியாக தடுத்து நிறுத்தி தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலை நாட்டவும், மக்கள் தங்கள் பணிகளை அச்சமின்றி மேற்கொள்ளவும் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். மேலும், சார் ஆய்வாளர்களுக்கு மிரட்டல் விடுத்த திமுகவினரை சட்டத்தின் முன்பு நிறுத்தி தண்டனை பெற்று தரவும், இதுபோன்ற நிகழ்வுகள் இனி நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.