பாளையங்கோட்டை சிறையில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி

பாளையங்கோட்டை சிறையில் கடந்த 22-04-2021 அன்று உயிரிழந்த முத்துமனோ என்பவரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி அறிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம், பூலம்…

பாளையங்கோட்டை சிறையில் கடந்த 22-04-2021 அன்று உயிரிழந்த முத்துமனோ என்பவரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி அறிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம், பூலம் குறுவட்டம், பூலம் பகுதி 2 கிராமம், கருணாநிதி தெரு, வாகைக்குளம் என்ற முகவரியில் வசிக்கும், பாவநாசம் என்பவரின் மகன் முத்து மனோ என்பவர் கடந்த 22-04-2021 அன்று பாளையங்கோட்டை மத்திய சிறையில் உயிரிழந்துள்ளார். இந்நிகழ்வு தொடர்பாக பெருமாள்புரம் காவல்நிலையத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சிறையில் உயிரிழந்த முத்துமனோவின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதாக தெரிவித்துள்ள அவர், உயிரிழந்தவரின் குடும்ப சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அவரது குடும்பத்திற்கு ரூ.10 லட்சத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார். மேலும் முத்துமனோவின் உயிரிழப்பு சம்பவத்திற்கு காரணமான பாளையங்கோட்டை சிறைச்சாலை பணியாளர்கள் 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்றும், இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டுள்ளது என்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவரது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.