குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கவுன்சிலராக தனது அரசியல் பயணத்தைத் தொடங்கி சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர், ஆளுநர் என அடுத்தடுத்து பல வளர்ச்சிகளைக் கண்டவர் திரௌபதி முர்மு. 1958- ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20ம் தேதி அன்று ஒடிசாவில் பிறந்த திரௌபதி முர்மு, சந்தல் என்ற பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். புவனேஸ்வரில் பட்டம் பயின்ற இவர், ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர், அரசியலில் ஆர்வம் ஏற்பட்டதை அடுத்து பாஜகவில் இணைந்தார். கடந்த 1997ம் ஆண்டு நடைபெற்ற கவுன்சிலர் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

கடந்த 2002ம் ஆண்டு ராய்ரங்க்ப்பூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒடிஷாவில் பிஜு ஜனதா தளம் மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி அமைந்திருந்த போது, இரண்டு ஆண்டுகள் போக்குவரத்துத்துறை அமைச்சராகவும், இரண்டு ஆண்டுகளுக்கு மீன்வளத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார்.

கடந்த 2015ம் ஆண்டு இவர் ஜார்கண்ட் மாநிலத்தின் முதல் பெண் ஆளுநராக நியமிக்கப்பட்டார். இந்தியாவிலேயே பழங்குடியினத்தைச் சேர்ந்த முதல் பெண் ஆளுநர் என்ற பெருமையையும் அப்போது பெற்றார். தொடர்ந்து, கடந்த 2022ம் ஆண்டு இந்தியாவின் குடியரசுத் தலைவரானார். இதன்மூலம், இந்தியாவின் முதல் பழங்குடியின குடியரசுத்தலைவர் என்ற பெருமையைப் பெற உள்ளார்.

இந்த நிலையில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று தனது 67வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். தேசத்திற்கு நீங்கள் செய்யும் சேவையில் உங்களுக்கு நல்ல ஆரோக்கியம், அமைதி மற்றும் மகிழ்ச்சி கிடைக்க வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.