தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க ஜப்பான் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு புல்லட் ரயிலில் பயணம் செய்தார்.
சென்னையில் 2024ம் ஆண்டு ஜனவரியில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கும் வகையிலும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலும், கடந்த 23ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொண்டார். அங்கு பல்வேறு நிறுவன தலைவர்களையும், அமைச்சர்களையும் முதலமைச்சர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூரில் 2 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு கடந்த 25ஆம் தேதி அன்று இரவு ஜப்பான் நாட்டின் ஒசாகா மாகாணம் வந்தடைந்தார். தொடர்ந்து, அதனைத் தொடர்ந்து 26 ஆம் தேதி அன்று காலை ஓசாகாவில், ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்புடன் (Japan External Trade Organization – JETRO) இணைந்து நடத்தப்பட்ட மாபெரும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் முதலீடுகள் மேற்கொள்ளவும், சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளவும் அழைப்பு விடுத்து உரையாற்றினார்.
இதனையடுத்து, தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்திற்கும், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த டைசல் சேஃப்டி சிஸ்டம்ஸ் நிறுவனத்திற்கும் இடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு பிறகு ஜப்பான் நாட்டின் பல்வேறு நிறுவனங்களின் முதன்மை அலுவலர்களுடனான மதிய உணவுடன் கூடிய சந்திப்பு நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஒசாகா மாகாணத்தின் துணை ஆளுநர் நோபுஹிகோ யமாகுஜிப்பான், நாட்டின் பழம்பெரும் கோட்டையான ஒசாகா கோட்டையின் சிறப்பைப் பற்றி எடுத்துக்கூறி அதனை பார்வையிடுமாறு அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பினையேற்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று ஜப்பான் நாட்டின், ஒசாகாவில் உள்ள 16-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட உலகப் புகழ்பெற்ற ஜப்பான் நாட்டின் கோட்டையான ஒசாகா கோட்டையை பார்வையிட்டார்.
இந்த நிலையில், ஒசாகாவில் தனது இரண்டு நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு டோக்கியோ மாநகரத்திற்கு புறப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை புல்லட் ரயிலில் பயணம் மேற்கொண்டார். இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், ஒசாகா நகரிலிருந்து டோக்கியோவுக்கு புல்லட் ரயிலில் பயணம் செய்கிறேன். ஏறத்தாழ 500 கி.மீ தூரத்தை இரண்டரை மணிநேரத்திற்குள் அடைந்துவிடுவோம். உருவமைப்பில் மட்டுமல்லாமல் வேகத்திலும் தரத்திலும் புல்லட் ரயில்களுக்கு இணையான ரயில் சேவை நமது இந்தியாவிலும் பயன்பாட்டுக்கு வர வேண்டும். ஏழை , எளிய , நடுத்தர மக்கள் பயனடைந்து, அவர்களது பயணங்கள் எளிதாக வேண்டும் என்ற தனது விருப்பத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
https://twitter.com/mkstalin/status/1662648342739030018?s=20
- பி.ஜேம்ஸ் லிசா










