காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி!

காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் (வயது 93). வயது மூப்பு காரணமாக குமரி அனந்தன் குடியாத்தம் காக்கா தோப்பில் அமைந்துள்ள அத்தி இயற்கை மற்றும் யோகா மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வந்தார். கடந்த 4 தினங்களுக்கு முன்பு அவரது உடல் நிலை மோசமடைந்தது. உடனடியாக அவர் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

வயது மூப்பு மற்றும் சிறுநீர் பிரச்னை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில், நேற்று (ஏப்.8) இரவு குமரி அனந்தன் சிசிக்கை பலனின்றி உயிரிழந்தார். பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான தமிழிசை சௌந்தரராஜனின் தந்தையான இவர் வயது மூப்பு காரணமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்தார்.

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தமிழிசை சௌந்தரராஜன் இல்லத்தில் குமரி அனந்தனின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இல்லத்திற்கு சென்று மறைந்த குமரி அனந்தனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். மேலும், தமிழிசை சௌந்தரராஜனுக்கு ஆறுதல் தெரிவித்தார். குமரி அனந்தனின் உடலுக்கு அரசு மரியாதையுடன் பிரியாவிடை அளிக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.