நீலகிரி மாவட்டம் உதகை பிங்கர் போஸ்ட் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள 700 படுக்கை வசதிகள் கொண்ட அரசு மருத்துவமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டிற்கு இன்று காலை 10 மணிக்கு திறந்து வைத்து பார்வையிடுகிறார்.
பின்னர் உதகை அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு 494.51 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முடிவுற்ற 1700 திட்டப் பணிகளை துவக்கி வைத்தும், 130 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 56 புதிய வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். தொடர்ந்து 102.17 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 15,634 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
நீலகிரி மாவட்டத்தில் இருந்து மாலையில் புறப்பட்டு கோவைக்கு செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கொங்குநாடு கலைக்குழு சார்பில் வள்ளி கும்மியாட்ட நிகழ்ச்சியை பார்வையிடுகிறார்.
பின்னர் கடந்த ஆண்டு பெருந்துறையில் நடந்த வள்ளிகும்மியாட்ட நிகழ்ச்சியில் பங்கேற்று சாதனை படைத்த 16 ஆயிரம் பெண்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கவுள்ளார். இதையொட்டி உதகையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.








