பிரதமருக்கு மாமல்லபுரம் கோயில் வடிவ சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசளித்தார்.
செஸ் ஒலிம்பியாட் போட்டியை துவக்கி வைப்பதற்காக இன்று மாலை சென்னை வந்தார் பிரதமர் நரேந்திர மோடி. அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக அடையாறு ஐஎன்எஸ் தளத்திற்கு வந்த பிரதமர், கார் மூலமாக நேரு உள் விளையாட்டு அரங்கிற்கு சென்றார். பிரதமருடன் ஒரே காரில் ஆளுநர் ஆர்.என்.ரவியும் வந்தார்.
பிரதமர் வாகனத்தை தொடர்ந்து மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், இணையமைச்சர் எல்.முருகன் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் வாகனங்கள் சென்றனர். பிரதமர் நரேந்திர மோடிக்கு வழிநெடுகிலும் பாஜக தொண்டர்கள் பாரத் மாதகி ஜே என்ற முழக்கத்தோடு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
விழாவிற்கு வந்த பிரதமர், கூட்டத்தில் கலந்துகொண்டவர்களை நோக்கி கையசைத்தார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் வரவேற்புரையாற்றினார். பிரதமருக்கு மாமல்லபுரம் கோயில் வடிவ சிலையை முதலமைச்சர் பரிசளித்தார். பிரதமர், முதலமைச்சர் இருவரும் அருகருகே அமர்ந்து சிரித்தபடி பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, முதலமைச்சர் ஏதோ சொல்ல, அதனை கேட்ட பிரதமர் செல்லமாக விரலை நீட்ட, அவரது கையைப் பிடித்தபடி சிரித்தார். தொடர்ந்து சிறிது நேரம் முதலமைச்சரின் தோளில் தட்டிகொடுத்து சிரித்தபடி உரையாடிக்கொண்டிருந்தார். அப்போது, ஒளிபரப்பான கலை நிகழ்ச்சிகள் தொடர்பாக பிரதமரிடம் முதலமைச்சர் விளக்கினார்.
கடந்த முறை பிரதமர் சென்னை வந்திருந்தபோது மேடையில் ஒரு இறுக்கமான சூழல் நிலவியது. பிரதமர் முன்னிலையில் தமிழ்நாட்டிற்கான கோரிக்கைகளை முன்வைத்து பேசினார் முதலமைச்சர். அதற்கு பாஜக தரப்பிலிருந்து எதிர்ப்புகள் எழுந்தன. ஆனால், தற்போதைய விழாவில் அதுபோன்ற எந்த சூழலும் இன்றி இருவரும் மகிழ்ச்சியை பறிமாறிக்கொண்டது திமுக மற்றும் பாஜகவினர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.







