சென்னையில் இருந்து கோடியக்கரைக்கு பெண் காவலர்கள் பாய்மர படகு மூலம் 1,000 கி.மீ. தூர படகு சாகச பயணம் செய்தனர். நாகையில் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
காவல்துறையில் பெண் காவலர்கள் சேர்க்கப்பட்டு 50 ஆம் (பொன்விழா) ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் பெண்காவலர்கள் தரப்பில் பெண் போலீசாருக்கான 1000 கிலோ மீட்டர் பாய்மர படகு பயணம் சென்னையில் கடந்த 10 ந் தேதி விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை துறைமுக
பகுதியில் இருந்து காவல்துறை அதிகாரி நீலாதேவி என்பவரின் தலைமையில் 25 பேர்
கொண்ட குழுவினர் 4 பாய்மர படகில் கடல்வழியாக சென்னை துறைமுகத்தில்
புறப்பட்டனர்.
இந்த குழு நேற்று நள்ளிரவு நாகை அடுத்த நாகூர் அருகே உள்ள அதானி தனியார்
துறைமுகத்திற்கு வந்தடைந்தது. அவர்களை காரைக்கால் மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் வரவேற்றார். மீண்டும் இன்று காலை அதானி தனியார் துறைமுகத்தில் இருந்து கோடியக்கரைக்கு பயணம் மேற்கொள்ளும் மகளிர் காவலர்களுக்கு நாகை
மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் வாழ்த்து தெரிவித்து படகு பயணத்தை கொடி
அசைத்து அனுப்பி வைத்தார்.
மேலும் லயன்ஸ் கிளப் சார்பில் அவர்களுக்கு பாராட்டி சால்வை அணிவித்து உலர் பழங்கள் வழங்கப்பட்டது. இன்று மாலை கோடியக்கரை செல்லும் அவர்கள் மீண்டும் கோடியக்கரையில் இருந்து புதுவை வழியாக சுமார் ஆயிரம் கிலோமீட்டர் பயணம் மேற்கொண்டு 17ந் தேதி சென்னை திரும்புகின்றனர். பாய்மர படகு சாகச பயணத்தில் 30 பெண் காவலர்கள் பங்கேற்றுள்ளனர்.








