சென்னையில் வரும் செப்டம்பர் 12 ம் தேதி தொடங்கும் உலக மகளிர் டென்னிஸ் போட்டிக்காக மைதானத்தை தயார்படுத்தும் பணிகள் 95 சதவீதம் நிறைவு பெற்றது.
சென்னை ஒபன் உலக மகளிர் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள டென்னிஸ் விளையாட்டு அரங்கில் வருகிற 12ம் தேதி தொடங்குகிறது. சமீபத்தில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியைப் பிரம்மாண்டமாக நடத்தி முடித்த நிலையில், அடுத்ததாக சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டியை நடத்த தமிழ்நாடு முதலமைச்சர் ஆதரவு தெரிவித்துள்ளார். செப்டம்பர் 18 ம் தேதி வரை ஒரு வாரம் நடக்கும் இந்த போட்டியில் சர்வதேச அளவிலான விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த போட்டிகளுக்காக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், மைதானத்தை சர்வதேச தரத்தில் மேம்படுத்தும் பணிகள் வெகு தீவிரமாக நடைபெற்று வருகின்றன. போட்டி தொடங்குவதற்கு இன்னும் ஓரிரு நாட்களே உள்ள நிலையில், கடந்த 3 மாதங்களாக தீவிரமாக நடைபெற்று வரும் பணிகள் அனைத்தும் தற்போது நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது. சர்வதேச தரத்திலான, ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகளுக்கு இணையான ஆடுகளம், அதிவெளிச்ச மின் விளக்குகள், பார்வையாளர்களின் இருக்கைகள் என அனைத்தும் தீவிரமாக ஏற்பாடு செய்யபட்டு வருகின்றன.
நாளை மற்றும் நாளை மறுநாள், சென்னை போட்டிகளில் பங்கேற்கும் வீராங்கனைகளுக்கு தகுதி சுற்று ஆட்டங்கள் நடத்தப்பட உள்ளன. 12 ஆம் தேதி முதல் முக்கிய போட்டிகளின் முதல் சுற்று ஆட்டம், ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளுக்கு தொடங்கப்பட உள்ளன. இந்நிலையில், முக்கிய போட்டிகளில் பங்கேற்க உள்ள வெளிநாட்டு வீராங்கனைகளுக்கு சென்னை நுங்கம்பாக்கம் டென்னிஸ் மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
அ.மாரித்தங்கம்







