பாசன கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற தமிழக அரசுக்கு நோட்டீஸ்: சென்னை உயர்நீதிமன்றம்!

தமிழகம் முழுவதும் பாசன கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற குழு அமைப்பது குறித்து பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த குமார் என்பவர் சென்னை…

தமிழகம் முழுவதும் பாசன கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற குழு அமைப்பது குறித்து பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ஆரணி அருகே காயப்பாக்கம் ஏரி பாசன கால்வாயை ஆக்கிரமித்து சிலர் விவசாயம் செய்து வருவதாக கூறியிருந்தார். ஆக்கிரமிப்பு காரணமாக கால்வாய் நீரோட்டம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் தமிழ்ச்செல்வி அடங்கிய அமர்வு, மனுதாரர் கிராமம் மட்டுமல்லாமல், தமிழகம் முழுவதும் ஆக்கிரமிப்புகளால் கால்வாய்கள் சுருங்கி விட்டதாகவும், இதனால் பயிர் சாகுபடியை திறமையாக மேற்கொள்ள முடியவில்லை என்றும் அதிருப்தி தெரிவித்தனர்.

இதுபோன்ற கால்வாய்களை ஆக்கிரமிப்பில் இருந்து முழுமையாக மீட்கும் வகையில், கால்வாய்களை ஆய்வு செய்து மீட்டெடுக்க ஊராட்சி ஒன்றிய அளவில் குழுவை அமைக்க வேண்டும் என தெரிவித்த நீதிபதிகள், இதுசம்பந்தமாக பதிலளிக்குமாறு தமிழக பொதுப்பணித்துறை செயலாளர், நகராட்சி நிர்வாக துறை செயலாளர், ஊரக வளர்ச்சித் துறை செயலாளருக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 2-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.