ஈராயிரம் ஆண்டுகள் அன்பைச் சேமித்த “சென்னை”?

தமிழ்நாட்டின் தலைநகரமாகவும், அனைத்து தரப்பு மக்களுக்கும் ஆதரவு அளிக்கும் இடமாகவும் இருக்கும்  சென்னையின் வரலாறு 2 ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தது என்றும் அதன் உண்மையான வரலாற்று தொல்லியல் துறையினர் ஆய்வு செய்ய வேண்டும் என்றம்…

chennai

தமிழ்நாட்டின் தலைநகரமாகவும், அனைத்து தரப்பு மக்களுக்கும் ஆதரவு அளிக்கும் இடமாகவும் இருக்கும்  சென்னையின் வரலாறு 2 ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தது என்றும் அதன் உண்மையான வரலாற்று தொல்லியல் துறையினர் ஆய்வு செய்ய வேண்டும் என்றம் கோரிக்கை எழுந்துள்ளது.

சென்னைக்கு வயது 383?

“வந்தாரை வாழவைக்கும் சென்னை” என அனைத்து தரப்பு மக்களாலும் போற்றப்படும் சென்னைக்கு வயது 383 என்று சென்னையில் ஒரு பிரிவினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கு அடிப்படையாக முன்வைக்கப்படும் ஆண்டு தான் 1639. அப்போது தான் கிழக்கு இந்திய கம்பெனியானது, தாமல் வெங்கடப்பா நாயகரிடம் இருந்து ஒரு சிறு நிலத்தை வாங்கி, சென்னை நகரத்தை உருவாக்கத் தொடங்கியது. தாமல் வெங்கடப்பா மற்றும் தாமல் அய்யப்ப நாயகர்களின் தந்தையான சென்னப்ப நாயகரின் பெயராலேயே சென்னை என்று அழைக்கப்படுகிறது.  chennai ribbon

ஈராயிரம் ஆண்டுகள் கடந்த சென்னை?

ஆனால் தமிழ்நாட்டின் தலைநகராக தற்போது விளங்கும் சென்னை ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட ஆண்டுக்கணக்கின்படி வேண்டுமானால் 383 என்று எடுத்துக்கொள்ளலாம்; அதன் உண்மையான ஆண்டு இரண்டு ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலானதாக இருக்கும் என்று அறிஞர்கள் சொல்கிறார்கள். அதற்கு சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கிடைக்கும் கல்வெட்டு ஆதாரங்களை சுட்டிக்காட்டுகின்றனர். அத்துடன் சங்க காலம் தொட்டு எப்படி கீழடி போன்ற இடங்கள் இருந்தனவோ, அது போலவே சென்னையும் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இருந்துள்ளது என்றும் வெள்ளைக்காரர்களுக்கு துதிபாடும் கூட்டமே சென்னையின் வயதை குறைத்து காட்டி மாயத் தோற்றத்தை உருவாக்குவதாகவும் மூத்த பத்திரிகையாளர் ஆர். ரங்கராஜ் குற்றம்சாட்டுகிறார்.

சென்னை 2000+

இதற்கு வலுவூட்டும் வகையில், சென்னை 2000 பிளஸ் அறக்கட்டளையின் தலைவரும் மூத்த பத்திரிகையாளருமான ஆர். ரங்கராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை முக்கியமாக பார்க்கப்படுகிறது. அதில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் 1000 ஆண்களுக்கு முன் நிறுவப்பட்ட கல்வெட்டுகள் உள்ளன, நூற்றுக்கணக்கான கோவில்கள் 1000 முதல் 1500 ஆண்டுகள் பழமையானது என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களும் அரசின் கலை பண்பாட்டுத் துறை, தொல்பொருள் ஆராய்ச்சி துறை, ஆதாரபூர்வமாக தெரிவிக்கின்றன. அப்படி இருக்கும் போது இந்த மெட்ராஸ் டே கூட்டம் எப்படி சென்னையின் வயது, வரலாற்றை மாற்றி எழுத முயற்சி செய்து, 383 என்று சொல்ல முடியும்? என்று கேள்வி எழுப்புகிறார். இது அப்பட்டமான பொய் பிரசாரம், உண்மையான வரலாற்றுக்கு எதிரானது. இதை சென்னை 2000 பிளஸ் அறக்கட்டளை வன்மையாக கண்டிக்கிறது” என்றும் ரங்கராஜ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

போலி கொண்டாட்டத்தை தடுக்க கோரிக்கை

மேலும் இதுவரை எல்லா அரசுகளும் இந்த மெட்ராஸ் டே தினத்தை எதிர்த்தன, சென்னை நாள் என்பது செப்டம்பர் 30 தான் என்று ஏற்றுக்கொண்டனர். இந்த மெட்ராஸ் டே தினத்தை தமிழர், தமிழ்நாட்டு பண்பாடு, வரலாற்றுக்கு புறம்பானது என்று சொல்லி ஒதுக்கி வைத்தனர் என்றும் அறிக்கையில் ரங்கராஜ் குறிப்பிட்டுள்ளார். இதை மீறும் அளவிற்கு ஒரு அரசு நிறுவனம் அறியாமையினால் கொண்டாட முயற்சி செய்தால் அதை தமிழக அரசு தடுக்க வேண்டும் , தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

முதலமைச்சருக்கு வேண்டுகோள்

அறிஞர் அண்ணா, மு கருணாநிதி, எம்ஜியார், ஜெயலலிதா ஆகியோர் ஆட்சி காலத்தில், ஆங்கிலேயர்களுக்கு துதி பாடும் மெட்ராஸ் டே வை ஒரு போதும் ஆதரிக்க வில்லை, எதிர்த்தார்கள். இந்த ஆட்சியும் தமிழர்கள் சார்பாக, சென்னையின் 2000 ஆண்டுகளுக்கு மேலான பண்பாட்டை, கலாச்சாரத்தை காக்கும் விதத்தில் , தமிழர்களின் உணர்வோடு துணையாக இருக்க வேண்டும், அரசுத்துறை எதுவும் இந்த போலியான கொண்டாட்டங்களை தவிர்க்கவேண்டும், என்று கலைஞர் வழி வந்த முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அறிவிக்கவேண்டும் என்றும் ரெங்கராஜ் வலியுறுத்தி இருக்கிறார்.


சென்னையின் உண்மையான வரலாற்றைக் கண்டறிக!

தமிழ்நாட்டிற்கு ஈராயிரம் ஆண்டுகளைக் கடந்த வரலாறு சுட்டிக்காட்டப்படும் போது, சென்னை க்கு மட்டும் எப்படி குறைந்த வயது இருக்கும் என்ற கேள்வியில் நியாயம் இல்லாமல் இல்லை. அத்துடன் சென்னை பல்லாவரத்தில் (பல்லவபுரம்) உள்ள திரிசூல மலையில், பழங்கால கற்கோடரியை ஆங்கிலேய அரசின் நில அளவைத்துறை அதிகாரி சர் ராபர்ட் புரூஸ் பூட்டே (Sir Robert Bruce Foote) கண்டெடுத்துள்ளார். இவை பல ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்று ஆராய்ச்சி முடிவுகள் சொல்கின்றன. முதுமக்கள் தாழியும் சென்னையைச் சுற்றி பல இடங்களில் கிடைத்துள்ளன. ஆகவே வந்தாரை வாழவைக்கும் சென்னையின் உண்மையான வயதையும் வரலாற்றையும் தமிழ்நாடு அரசின் தொல்லியல்துறை கண்டறிந்து அறிவிக்க வேண்டும் என்றும் வரலாற்று ஆய்வாளர்களும், தொல்லியல் அறிஞர்களும் கோரிக்கை வைக்கின்றனர்.
-ஜெயகார்த்தி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.