பல்வேறு காரணிகளின் அடிப்படையில் சென்னை அருகே பரந்தூரில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்திருப்பதாக மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் பசுமை வழி விமான நிலையம் அமைப்பதற்கான பணிகள் குறித்தும் நிதி ஒதுக்கீடு, இடம் தேர்வு குறித்தும் மாநிலங்களவையில் உறுப்பினர் கனிமொழி சோமு எழுத்து பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதில் அளித்துள்ள மத்திய விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி.கே சிங், சென்னை அருகே புதிய பசுமை வழி விமான நிலையத்தை அமைப்பதற்கு தமிழ்நாடு அரசு நான்கு இடங்களை தேர்வு செய்து அந்த இடங்களை ஆய்வு செய்யுமாறு இந்திய விமான நிலைய ஆணையத்திடம் கேட்டதாக தெரிவித்துள்ளார். இந்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் நடத்திய நேரடி ஆய்வின் மூலம் இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்கான சாத்திய கூறுகள் சென்னைக்கு அருகே உள்ள பரந்தூர் மற்றும் பன்னூர் ஆகிய இரண்டு இடங்களில் இருப்பதாக முடிவு செய்யப்பட்டதாகவும் வி.கே.சிங் தனது பதிலில் தெரிவித்துள்ளார்.
மக்கள் வசிக்கும் இடம், தொழில் நிறுவனங்கள், நிலத்தேவை, நிலம் கையகப்படுத்துதல் மற்றும் விமான நிலையம் அமைக்க தேவைப்படும் செலவு உள்ளிட்டவற்றை ஒப்பிட்டு பார்த்து இரண்டாவது பசுமை வழி விமான நிலையத்தை சென்னை பரந்தூரில் அமைக்க முடிவு செய்துள்ளதாக மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.
பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க மாநில அரசு முடிவு செய்துள்ள நிலையில் விமான நிலையம் அமைப்பதற்கான தலத்தின் அனுமதி கோரி மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகத்திடம் மாநில அரசு விண்ணப்பிக்க வேண்டும் எனவும் மத்திய அரசின் எழுத்துப்பூர்வ பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.







