சென்னை மாநகராட்சியின் கீழ் நடைபெறும் திட்டங்களின் தகவல்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
தேர்தலின் மூலம் மேயர், வார்டு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படும் பட்சத்தில் சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்படும் பணிகள் அனைத்தும் இணையதளம் வாயிலாகப் பதிவேற்றம் செய்யப்படும். கடந்த ஒரு ஆண்டாக இது குறித்த தகவல்கள் மாநகராட்சி இணையதளத்தில் பதிவு செய்யப்படவில்லை. தற்போது சென்னை மாநகராட்சியில் நடைபெறும் திட்டங்கள் தொடர்பான தகவல்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் செய்தியாளர்களுக்கு அளித்த தகவலில், சென்னை பெருநகர மாநகராட்சிக்கு உட்பட்ட மண்டலங்களில் நடைபெற்று வரும் பணிகள் மற்றும் முடிவுற்ற பணிகள் தொடர்பான விவரங்கள் மாநகராட்சி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. திட்டங்களின் பல்வேறு தகவல்கள் பதிவேற்றப்பட்டு வருகின்றன. இதன் வாயிலாக பெருநகர சென்னை மாநகராட்சியில் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.







