செங்கல்பட்டு நகர பாட்டாளி மக்கள் கட்சி நகர செயலாளர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில், ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செங்கல்பட்டு மக்கான் சந்து பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (46). இவர் பாட்டாளி மக்கள் கட்சியின் செங்கல்பட்டு நகர செயலாளராக பதவி வகித்து வந்தார். இவர் மணிக்கூண்டு அருகே பூ வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில் வழக்கம் போல வியாபாரம் முடித்து விட்டு இரவு இவர் 9.45 மணியளவில் வீட்டுக்கு செல்ல முயன்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் நாகராஜை வெட்டினர். இதில் நாகராஜ் பலத்த காயமடைந்தார். இதனையடுத்து அங்கு சென்ற போலீசார் அவரை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து மருத்துவமனை முன்பு ஏராளமான பாமகவினர் குவிந்தனர். தொடர்ந்து நாகராஜன் உடலை பிணவறைக்கு எடுத்துச் செல்ல மறுப்பு தெரிவித்து உறவினர்கள் மற்றும் பாமகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும்போதே செங்கல்பட்டு திண்டிவனம் ஜிஎஸ்டி சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற செங்கல்பட்டு டிஎஸ்பி குற்றவாளிகளை விரைந்து கைது செய்வதாக உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. நாகராஜ் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர் முன் விரோத காரணமா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.
கடந்த 50 நாட்களுக்குள் மறைமலைநகரில் பா.ம.க நிர்வாகி மனோகரன் கொலை செய்யப்பட்டார். அடுத்த பத்து நாட்களுக்குள் வன்னியர் சங்க மாவட்ட தலைவர் காளிதாசன் கொலை செய்யப்பட்டார்.







