செக் மோசடி வழக்கு விவகாரம் தொடர்பாக இயக்குநர் லிங்குசாமிக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் மேல்முறையீடு செய்யவுள்ளதாக இயக்குநர் லிங்குசாமி விளக்கமளித்துள்ளார்.
திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம், கடந்த 2014 ஆம் ஆண்டு பிவிபி கேப்பிட்டல்ஸ் என்ற நிதி நிறுவனத்திடம் 1 கோடியே 3 லட்சம் ரூபாய்க் கடன் பெற்றிருந்தது. ஆனால், இந்த கடனை திருப்பிக் கொடுக்காமல் அடுத்தடுத்து படங்களைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டதால் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திற்கு எதிராக பிவிபி கேப்பிட்டல்ஸ் நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம் பிவிபி நிறுவனத்திடம் பெற்ற கடனை திரும்பச் செலுத்துமாறு இயக்குநர் லிங்குசாமிக்கு உத்தரவிட்டது. இதையடுத்து இயக்குநர் லிங்குசாமி, 1 கோடியே 3 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை பிவிபி கேப்பிட்டல்ஸ் நிறுவனத்திடம் வழங்கினார். ஆனால், அந்த காசோலைகள் பணமின்றி திரும்பியதால் பிவிபி கேப்பிட்டல்ஸ் நிறுவனம் லிங்குசாமிக்கு எதிராகச் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம் இயக்குநர் லிங்குசாமிக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டது.
அண்மைச் செய்தி: ‘மாவட்ட ஆட்சியர்களுக்குத் தலைமைச்செயலாளர் இறையன்பு கடிதம்!’
இந்நிலையில், இயக்குநர் லிங்குசாமி விளக்கமளித்துள்ளார். அதில், இன்று பல ஊடகங்களில் பரபரப்பாக வரும் என்னைப் பற்றிய ஒரு செய்திக்குத் தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டியது என் கடமை. எனத் தெரிவித்துள்ள அவர், இந்த வழக்கு பிவிபி கேப்பிடல் லிமிடெட் மற்றும் எங்களது தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் பிலிம் மீடியா பிரைவேட் லிமிடெட் இடையிலானது. அவர்கள் தொடுத்த வழக்கின் மேல் இன்று நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. நாங்கள் இன்று நீதிமன்றம் அளித்த தீர்ப்பிற்கு எதிராக உடனடியாக மேல் முறையீடு செய்து சட்ட ரீதியாகச் சந்திக்க உள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.








