புதுக்கோட்டையில் தேர் கவிழ்ந்து விபத்து; 7 பேர் காயம்

புதுக்கோட்டை திருக்கோகரணம் ஸ்ரீ பிரகதாம்பாள் உடனுறை திருக்கோகர்னேஸ்வரர் கோயில் ஆடித்தேரோட்டத்தில் தேர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். புதுக்கோட்டை நகரில் மிகவும் பிரசித்தி பெற்ற திருக்கோகரணம் ஸ்ரீ பிரகதாம்பாள் உடனுறை திருக்கோகர்னேஸ்வரர் கோயில்…

புதுக்கோட்டை திருக்கோகரணம் ஸ்ரீ பிரகதாம்பாள் உடனுறை திருக்கோகர்னேஸ்வரர் கோயில் ஆடித்தேரோட்டத்தில் தேர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

புதுக்கோட்டை நகரில் மிகவும் பிரசித்தி பெற்ற திருக்கோகரணம் ஸ்ரீ பிரகதாம்பாள் உடனுறை திருக்கோகர்னேஸ்வரர் கோயில் ஆடி தேரோட்டம்  ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். 10ம் நூற்றாண்டில்  கட்டப்பட்ட குடவரை கோயிலான திருக்கோவனேஸ்வரர் புதுக்கோட்டை மாவட்ட தொண்டைமான் மன்னர்களின் குலதெய்வமாக வழிபட்டு வந்தனர்.

புதுக்கோட்டை மாவட்ட இந்து சமய அறநிலைத்துறையின் சார்பாக இத்திருக்கோயிலின் ஆடித் திருவிழா 23ம் தேதி காப்பு கட்டுடன் ஆரம்பிக்கப்பட்டது. தொடர்ந்து சிறப்பு வழிபாடுகள் நடைபெற்ற நிலையில் இன்று ஆடிப்பூர தேரோட்டம் நடைபெற்றது. இன்று காலை 7 மணிக்கு ஸ்ரீ பிரகதாம்பாள் உடனுறை திருக்கோணேஸ்வரர் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இத்தேரோட்ட விழாவை காண புதுக்கோட்டை நகரவை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை ஒரே நேரத்தில் வெகு வேகமாக இழுத்ததால் தேர் நிலை குலைந்து தேரின் பின் சக்கரத்தில் கிளாம்பு கழன்று முன்னோக்கி சாய்ந்தது. தேர் சாய்ந்து விழுந்ததில் இரண்டு பெண்கள் உட்பட ஏழு பேர் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

சம்பவம் தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் மற்றும்  காவல் துறையினர் உடனடியாக தேர் அடியில் விழுந்து கிடந்தவர்களை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே விரைந்து வந்து பார்வையிட்டு விபத்து குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

இதைத்தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சரும், விராலிமலை சட்டமன்ற உறுப்பினருமான விஜயபாஸ்கர் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு காயம் அடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜய பாஸ்கர், அதிமுக ஆட்சி காலத்தில் தான் இக்கோயிலுக்கு குடமுழுக்கு விழா நடத்தப்பட்டது. கடந்த மூன்று ஆண்டுகளாக தேர் நடைபெறாமல் இருந்தது. அதன்பிறகு இந்த ஆண்டு தேர் திருவிழா நடைபெற்றதால்,  பக்தர்கள் ஆர்வக் மிகுதி காரணமாக தேரை இழுத்ததன் காரணமாக பேர் விபத்துக்குள்ளாகி கீழே விழுந்தது. அதிர்ஷ்டவசமாக எந்த விதமான அசம்பாவிதமும் ஏற்படாமல் ஒரு சில பேருக்கு மட்டும் காயம் ஏற்பட்டுள்ளது.


தஞ்சையில் நடந்த சம்பவத்திற்கு பிறகு தமிழக அரசு இதுபோன்ற தேர் விழாக்களில் நடத்துவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று அதிமுக சார்பில் சட்டமன்றத்தில் கேட்க கொள்ளப்பட்டது. ஆனால் மீண்டும் மீண்டும் இது போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த தேர் விபத்து தொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு இனி இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.