சந்திரயான் -3 விண்கலத்தின் விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கிய விடியோவை இஸ்ரோ இன்று வெளியிட்டுள்ளது.
நிலவின் மேற்பரப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் இந்திய விண்வெளி ஆய்வு மையம், ஜூலை 14-ஆம் தேதி எல்விஎம் மாக்-3 ராக்கெட் மூலம் அனுப்பிய சந்திரயான் – 3 விண்கலம் திட்டமிட்டபடி புதன்கிழமை(ஆக. 23) மாலை 6.04 மணியளவில் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இதன்மூலம் ரஷியா, அமெரிக்கா, சீனா நாடுகளுக்கு அடுத்தபடியாக நிலவின் மேற்பரப்பில் கட்டுப்பாட்டுடன் விண்கலத்தை தரையிறக்கி சாதனை படைத்தது.
மேலும் நிலவின் தென் துருவத்தில் கால் பதித்த முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. சந்திரயான் 3 விண்கலத்தின் லேண்டர் விக்ரம் மற்றும் ரோவர் பிரக்யான் ஆகியவற்றின் செயல்பாடுகளை தொடர்ந்து இஸ்ரோ வெளியிட்டு வருகிறது. அந்தவகையில் லேண்டர், ரோவர் எடுத்த புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டது . மேலும் விக்ரம் லேண்டர் நிலவின் சாஃப்ட் லேண்டிங் முறையில் தரையிறக்கப்பட்ட வீடியோவையும் இஸ்ரோ வெளியிட்டிருந்தது.
இதனை தொடர்ந்து தற்போது விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் தரையிறங்கிய விடியோவை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
… … and here is how the Chandrayaan-3 Rover ramped down from the Lander to the Lunar surface. pic.twitter.com/nEU8s1At0W
— ISRO (@isro) August 25, 2023







