சந்திரயான்-3 திட்டம் வெற்றி : இஸ்ரோ விஞ்ஞானிகளை நேரடியாக சந்திக்கிறார் பிரதமர் மோடி!

வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்து நாளை மறுநாள் நாடு (ஆகஸ்ட் 26)திரும்பும் பிரதமர் மோடி இஸ்ரோ விஞ்ஞானிகளை நேரடியாக சந்திக்க திட்டமிட்டுள்ளார். நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண் கலத்தின் விக்ரம்…

வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்து நாளை மறுநாள் நாடு (ஆகஸ்ட் 26)திரும்பும் பிரதமர் மோடி இஸ்ரோ விஞ்ஞானிகளை நேரடியாக சந்திக்க திட்டமிட்டுள்ளார்.

நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண் கலத்தின் விக்ரம் லேண்டர் நேற்று வெற்றிகரமாக தரையிறங்கியது. நேற்று மாலை 5.44 மணி அளவில் சந்திரயான் 3-ன் கடைசி கட்ட பணிகள் தொடங்கியது. இதனிடையே இந்த நிகழ்வை தென் ஆப்பிரிக்காவில்  பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி அங்கிருந்து காணொலி முலம் பார்த்தார். அப்போது நிலவிற்கும் விக்ரம் லேண்டருக்கும் இடையே உள்ள இடைவெளியை சிறிது சிறிதாக குறைக்கும் பணி வெற்றிகரமாக நடைபெற்று வந்தது.

அதே நேரத்தில் விக்ரம் லேண்டரின் கால்கள் நிலவை நோக்கி சரியாக திருப்பப்பட்டது. இதனையடுத்து நிலவை நோக்கி மெல்ல விக்ரம் லேண்டர் நெருங்கிய நிலையில், இறுதியாக நிலவின் தென் துருவத்தில் விக்ரம் லேண்டர் தடம் பதித்தது. அப்போது “இந்தியா, நான் என் இலக்கை அடைந்துவிட்டேன், நீங்களும் தான் என்று சந்திரயான் -3-ல் இருந்து இஸ்ரோவிற்கு செய்தி வந்தது. இதன்மூலம் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கிய முதல் நாடு இந்தியா என்ற பெருமையை பெற்றது. இதனையடுத்து இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

இந்நிலையில், பிரதமர் மோடி, இஸ்ரோ விஞ்ஞானிகளை நேரில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது தென் ஆப்பிரிக்காவில் உள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு பயணத்தை முடித்துக் கொண்டு நாளை கிரீஸ் செல்கிறார். அங்கு பயணத்தை முடித்துக்கொண்டு நாளையே அவர் தாயகம் திரும்புகிறார். நாடு திரும்பியவுடன் (ஆகஸ்ட் 26) பிரதமர் மோடி, பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மையத்துக்கு செல்ல திட்டமிட்டுள்ளார். அங்கு சந்திரயான்-3 திட்ட வெற்றிக்கு உழைத்த விஞ்ஞானிகளை சந்திக்கும் மோடி அவர்களுக்கு பாராட்டு தெரிவிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.