நளினியின் பாஸ்போர்ட் விண்ணப்பத்தின் மீது 4 வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக நளினி தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
32 ஆண்டு சிறை வாசத்திலிருந்து வெளியில் வந்துள்ளேன். என் மகளுடன் இருப்பதற்காக லண்டன் செல்ல ஏதுவாக பாஸ்போர்ட் கேட்டு ஜூன் மாதம் விண்ணப்பித்தும் பாஸ்போர்ட் வழங்கப்படவில்லை. காவல்துறை சரிபார்த்த விவரங்களை பாஸ்போர்ட் அதிகாரிக்கு அனுப்பவும், பாஸ்போர்ட் வழங்கும்படி பாஸ்போர்ட் அதிகாரிக்கும் உத்தரவிட வேண்டும் என நளினி கோரியிருந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, காவல்துறை சரிபார்ப்பு முடிந்து, பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு அறிக்கை அளிக்கப்பட்டுவிட்டதாக காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதனை அடுத்து நளினியின் பாஸ்போர்ட் விண்ணப்பத்தின் மீது 4 வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.







