ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபுநாயுடு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டதையடுத்து, தமிழ்நாட்டில் இருந்து ஆந்திரா செல்லும் பேருந்து சேவை பாதிக்கப்பட்டது.
ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய தலைவருமான சந்திரபாபு நாயுடு, திறன் மேம்பாட்டுத் திட்ட முறைகேடு வழக்கில் ஆந்திர மாநில குற்றப் புலனாய்வுத் துறையினரால் இன்று கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தையொட்டி பாதுகாப்பு நடவடிக்கையாக ஆந்திர மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
மேலும் பேருந்துகளும் நிறுத்தப்பட்டன. கடைகள், வணிக நிறுவனங்களும் அடைக்கப்பட்டுள்ளன. இதனைதொடர்ந்து சம்பவத்தை தொடர்ந்து தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தில் இருந்து ஆந்திரத்துக்குச் செல்லும் பேருந்துகள் இயக்கப்படவில்லை. வேலூர், திருவண்ணாமலை, ஆரணி, திருச்சி உள்ளிட்ட இடங்களில் இருந்து திருப்பதிக்கு செல்லும் பேருந்துகள் அனைத்தும் வேலூர் புதிய பேருந்து நிலையத்திலேயே சில மணி நேரம் நிறுத்தப்பட்டன.
இதே போல் மற்ற வழித்தடங்களில் இருந்து ஆந்திர மாநிலத்துக்கு இயக்கப்படும் பேருந்துகளும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், வேலூர் வழியாக திருப்பதிக்கு செல்லும் பக்தர்கள் மட்டுமின்றி ஆந்திர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் செல்லக்கூடிய பொதுமக்களும் கடும்அவதிக்குள்ளாகினர்.







