சண்டிகர் விமான நிலையத்திற்கு சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங் பெயர் சூட்டப்படும் என பிரதமர் மோடி மனதின் குரல் நிகழ்ச்சியில் தெரிவித்தார்.
ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் பிரதமர் மோடி மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுடன் உரையாற்றி வருகிறார். அதன்படி இந்த மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று மனதில் குரல் நிகழ்ச்சியில் பேசினார்.
அப்போது பேசிய அவர், புதிய இந்தியாவை நோக்கி நாம் முன்னேறும் போது சுதந்திர போராட்ட வீரர்களை நாம் நினைவில் கொள்ள வேண்டும். செப்டம்பர் 28ம் தேதி சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங் பிறந்த நாள் கொண்டாடப்பட உள்ளது. அவரின் பிறந்த நாளை முன்னிட்டு சண்டிகர் விமான நிலையம் ஷாஹீட் பகத்சிங் விமான நிலையம் என பெயர் மாற்றம் செய்ய உள்ளது.
கைப்பேசி தயாரிப்பில் இந்தியா 2வது மிகப்பெரிய உற்பத்தி மையமாக வளர்ந்துள்ளது. பாலிதீன் பைகள் பயன்படுத்துவதை நாம் குறைக்க வேண்டும். அதற்கு பதிலாக சணல், பருத்தி, வாழைநார் உள்ளிட்டவை கொண்டு தயாரிக்கப்படும் பொருள்களை பயன்படுத்த ஊக்குவிக்க வேண்டும்.
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், நகரை தூய்மையாக வைத்துக் கொள்வதில் பெங்களூரு, மீரட் நகரங்கள் மேற்கொண்ட முயற்சி பாராட்டத்தக்கது. உலக வெப்பமயமாதல் காரணமாக காலநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு கால நிலை மாற்றம் மிகப்பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என கூறினார்.







