தமிழகத்தில் 18 மாவட்டங்களில் கனமழையும், 4 மாவட்டங்களில் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலான பகுதிகளில் மழை பெய்து வருகிறது. தேனி, திண்டுக்கல், நீலகிரி, மற்றும் டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சென்னையில் கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு மழை பெய்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில் மீண்டும் தமிழகத்துக்கு மழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று 22 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
இதேபோல் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, ஈரோடு, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, நெல்லை, குமரி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையை பொறுத்தவரை 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.