அடுத்த மூன்று மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தென் மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி, சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இரவு கனமழை கொட்டி தீர்த்தது.
சென்னை சென்ட்ரல், எழும்பூர், பாரிமுனை, சேப்பாக்கம், வில்லிவாக்கம், புரசைவாக்கம், சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம், வடபழனி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. அதேபோல புறநகர் பகுதிகளான அம்பத்தூர், கொரட்டூர், கள்ளிக்குப்பம், மதுரவாயல் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது.
இதனால் சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுமா? என மாணவர்கள் எதிர்பார்த்தனர். இந்த நிலையில், சென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை என்றும் பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் எனவும் சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி தர்மபுரி ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களிலும் அடுத்த மூன்று மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தென் மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.







