ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சராக சம்பாய் சோரன் பதவியேற்றார்!

ஜார்க்கண்ட் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக சம்பாய் சோரன் இன்று பதவியேற்றுள்ளார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணியில் ஆட்சி நடைப்பெற்று வருகிறது.  ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவரான…

ஜார்க்கண்ட் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக சம்பாய் சோரன் இன்று பதவியேற்றுள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணியில் ஆட்சி நடைப்பெற்று வருகிறது.  ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவரான ஹேமந்த் சோரன் அம்மாநில முதலமைச்சராக பதவி வகித்து வந்தார். இதற்கிடையே நில சுரங்க முறைகேடு வழக்கை விசாரித்து வந்த அமலாக்கத்துறை, அவ்வழக்கில் முதலமைச்சராக இருந்த ஹேமந்த் சோரனை கைது செய்து அதிரடி காட்டியது.

ஹேமந்த் சோரன் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற தகவல் கசிந்தபோதே, கட்சிக்குள் அடுத்த முதலமைச்சர் யார் என்ற கேள்வியும்,  பலதரப்பட்ட குழப்பங்களும் ஏற்பட்டது.  அப்போது ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரனின் பெயர் அக்கட்சி நிர்வாகிகளால் முன்மொழியப்பட்டது.  ஆனால் அதற்கு மாறாக பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை தன்வசம் வைத்திருந்த ஜே.எம்.எம் கட்சியின் மூத்த தலைவர் சம்பாய் சோரன் அடுத்த முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார்.
விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்பாய் சோரன் அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு வரை படித்தவர்.  இவருக்கு திருமணமாகி 4 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர். 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் ஷிபு சோரனுடன் இணைந்து,  ஜார்க்கண்ட் தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி பல போராட்டங்களை முன்னெடுத்தார்.  ஜார்க்கண்ட் இயக்கத்தின் போராட்டங்களில் தீவிரமாக ஈடுபட்ட சம்பாய் சோரனுக்கு ‘ஜார்க்கண்ட் புலி’ என்ற பெயரும் உண்டு.
ஒரு கட்டத்தில் மக்கள் அளித்த பேராதரவுடன் அரசியலுக்குள் அடியெடுத்து வைத்த சம்பாய் சோரன், சரைகேலா தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டார்.  பெரிய வாக்கு வித்தியாசத்தில் அந்த தேர்தலில் வெற்றிகண்ட சம்பாய் சோரன்,  முதன் முறையாக சட்டமன்ற உறுப்பினராக தேர்வானார்.  அதன்பிறகு ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியில் தன்னை இணைத்துக்கொண்ட சம்பாய் சோரன், அக்கட்சியில் தனது தகுதியை படிப்படியாக வளர்த்துக்கொண்டு மூத்த தலைவராக உருவெடுத்தார்.
இதையடுத்து,  சம்பாய் சோரன் சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவு கடிதத்தை ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனிடம் வழங்கி,  ஆட்சியமைக்க உரிமை கோரினார்.  ஜார்க்கண்ட் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக மாநில போக்குவரத்துத் துறை அமைச்சருமான சம்பயி சோரன் தேர்வு செய்யப்பட்டார். 67 வயதான பழங்குடியின தலைவர், மாநிலத்தின் 12வது முதலமைச்சராக இன்று பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.