ஓமிக்ரான் வகை கொரோனா தொற்றை தடுக்க மகாராஷ்டிரா அரசு மேற்கொண்டுள்ள கட்டுப்பாடுகளில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வந்திருக்கிறது. இந்நிலையில் தற்போது தொற்று பாதிப்பிலிருந்து உலக நாடுகள் மெள்ள மீண்டும் நிலையில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமிக்ரான் வகை கொரோனா தொற்று புதிய அச்சுறுத்தலாக உருமாறியுள்ளது.
ஏறத்தாழ 20 மாதங்களுக்கு பின்னர் சர்வதேச விமான போக்குவரத்து டிச.15 முதல் மீண்டும் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் இந்த முடிவு தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சர்வதேச விமான பயணிகளுக்கு மகாராஷ்டிரா அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளில் மாற்றம் செய்ய வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மகாராஷ்டிரா மாநில கூடுதல் தலைமை செயலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அம்மாநில அரசின் கொரோனா கட்டுப்பாடுகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக வெளிநாடுகளிலிருந்து வரும் ஒவ்வொருவரும் கட்டாயமாக RT-PCR பரிசோதனையை மேற்கொள்ள வெண்டும் என்று மாநில அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அதேபோல அனைத்து சர்வதேச பயணிகளும் கட்டாயம் 14 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
மத்திய அரசு விதித்த விமான பயணிகளுக்கான கட்டுப்பாடுகளில் ‘ஆபத்தான நாடுகள்’ பட்டியலில் உள்ள நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு மட்டுமே RT-PCR பரிசோதனை மற்றும் 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால் மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் அனைத்து நாடுகளிலிருந்தும் வரும் பயணிகளுக்கும் மேற்குறிப்பிட்ட கட்டுப்பாடுகள் பொருந்தும் என அறிவித்துள்ளது.
எனவே மாநில அரசு இந்த கட்டுப்பாடுகளை ஒருங்கிணைத்து அதை மத்திய அரசின் கட்டுப்பாட்டுடன் இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.









