அரசு முறை பயணமாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் வெள்ளிக்கிழமை இலங்கைக்கு பயணம் செய்கிறார்.
இலங்கைக்கு நாளை பயணம் மேற்கொள்ளவுள்ள எஸ். ஜெய்சங்கர், அதிபர் அனுரகுமார திஸநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோரை மரியாதை நிமித்தம் சந்திப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் அதிபர் தேர்தல் முடிந்த பின்னர் புதிய அரசு அமைந்துள்ள நிலையில், இந்நாட்டுக்கு வரும் முதலாவது வெளிநாட்டு பிரதிநிதியாக ஜெய்சங்கர் செல்கிறார். அதிபர் அநுரகுமார திஸாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் உள்ளிட்டோரை அவர் சந்திக்கவுள்ளார்.
மேலும், தமிழ், முஸ்லிம் கட்சிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுடனும் மற்றும் சிவில் சமூகத்தினருடனும் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு நடத்தவுள்ளார்.இந்த சந்திப்பின் போது டெல்லி வருமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை, அதிபர் அநுரகுமாரவிடம் ஜெய்சங்கர் அளிக்கவுள்ளார். ஒருநாள் பயணமாக இலங்கை செல்லும் அவருடன், இந்தியாவின் முக்கிய உயர்மட்டத் தூதுக்குழு ஒன்றும் செல்கிறது.
இந்நிலையில், அரசு முறை பயணமாக வெள்ளிக்கிழமை இலங்கைக்கு பயணம் செய்யவுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு தமிழக மீனவர்கள் சார்பாக 4 கோரிக்கைகளை முன்வைக்கப்பட்டுள்ளன. தேசிய பாரம்பரிய மீனவர்கள் கூட்டமைப்பினால் இந்த கோரிக்கைகள் அடங்கிய கடிதம் வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெங்சங்கருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
- 1974ஆம் ஆண்டு கச்சத்தீவு ஒப்பந்தத்தின் 6-வது அம்சமான பாரம்பரிய மீன்பிடி கடலில் உள்ள மீன்பிடிக்கும் உரிமையை உறுதி செய்ய வேண்டும்.
- இலங்கை சிறையில் உள்ள 125க்கு மேற்பட்ட இந்திய மீனவர்களையும், 190க்கும் மேற்பட்ட விசைப்படகு மற்றும் நாட்டுபடகுகளை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- இந்திய நீதிமன்றங்களால் விடுதலை செய்யப்பட்டு தமிழக கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்களின் மீன்பிடி படகுகளை மீண்டும் அவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
- இலங்கை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட 10க்கு மேற்ப்பட்ட இந்திய மீன்பிடி படகுகளை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற 4 கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டுள்ளன.







