டெல்லி பல்கலைக்கழக தமிழ்த்துறைகள் மூடப்படுவதை மத்திய, மாநில அரசுகள் தடுக்க வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
தேசிய தலைநகர் டெல்லியில் உள்ள தமிழ் குடும்பங்களுக்காக டெல்லி பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக இப்பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள 4 பணியிடங்களும் நிரப்பபடாமல் உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனால் தமிழ்த்துறைகள் மூடப்படும் அபாயம் மேலெழுந்துள்ளது.
ஏற்கெனவே தமிழ் ஊடகங்கள் ஏற்படுத்திய அழுத்தத்தின் காரணமாக காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியாகின. ஆனால் அவை வெறும் அறிப்போடு நின்றுவிட்டன.
இந்நிலையில், தமிழ்த்துறைகள் மூடப்படுவதை மத்திய, மாநில அரசுகள் தடுக்க வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து டிவிட்டரில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,
“தில்லி பல்கலைக்கழக தமிழ்த்துறையின் 4 பேராசிரியர் பணியிடங்கள் பல ஆண்டுகளாக காலியாக உள்ளதாலும், இப்போதுள்ள ஒரே பேராசிரியர் ஓரிரு மாதங்களில் ஓய்வு பெற இருப்பதாலும் தில்லி பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை எந்த நேரமும் மூடப்படும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது.
https://twitter.com/draramadoss/status/1472894424220794881
தில்லி பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் தயாள்சிங் கல்லூரிக்கு கடந்த 4 ஆண்டுகளாக தமிழ்ப் பேராசிரியர்கள் நியமிக்கப்படாததால் அதன் தமிழ்த்துறையும் மூடப்படும் நிலை உருவாகியுள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க தில்லி பல்கலையின் தமிழ்த்துறைகள் மூடப்படுவதை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.
தில்லி பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள தமிழ்ப் பேராசிரியர்கள் பணியிடங்களை உடனடியாக நிரப்புவதன் மூலம் தமிழ்த்துறை தொடர்ந்து இயங்குவதை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை உறுதி செய்ய வேண்டும்; இதற்காக மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.
தில்லி லேடி ஸ்ரீராம் மகளிர் கல்லூரி, மிராண்டா ஹவுஸ் மகளிர் கல்லூரி ஆகியவற்றின் தமிழ்த்துறைகள் ஆசிரியர்கள் இல்லாததால் மூடப்பட்டு விட்ட நிலையில், அவற்றுக்கும் தமிழ்ப் பேராசிரியர்களை நியமித்து மீண்டும் தமிழ்த்துறையை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என வலியுறுத்தியுள்ளார்.








