சிபிஐ சிறப்பு இயக்குநர் பிரவீன் சின்ஹா, இன்டர்போலின் ஆசிய நாடுகள் பிரதிநிதியாக தேர்வாகி இருக்கிறார்.
சர்வதேச குற்ற நடவடிக்கைகளை தடுப்பதற்கு, கடந்த 1923 ஆம் ஆண்டு ஆஸ்திரியாவின் வியன்னாவில் ’இன்டர்போல்’ எனப்படும் சர்வதேச காவல்துறை அமைப்பு தொடங்கப்பட்டது. இதன் தலைவராக சீனாவை சேர்ந்த மெங் ஹாங்வெய் இருந்து வந்தார். இவர் பதவிக் காலம் 4 ஆண்டுகளாக இருந்த நிலையில், கடந்த 2018 ஆம் ஆண்டு சீனா சென்ற அவர், திரும்பி வரவில்லை. ஊழல் குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் சீன அரசால் கைது செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், சுமாா் 190 நாடுகளின் காவல் துறைகளை ஒருங்கிணைக்கும் இன்டர்போல் அமைப்பின் 89-வது வருடாந்திர கூட்டம் துருக்கியின் இன்ஸ்தான்புல் நகரில் நடந்தது. இதில், ஐக்கிய அரபு அமீரகத்தைச் சோ்ந்த சா்ச்சைக்குரிய காவல்துறை தலைவா் அகமது நாசா் அல்-ரைசி (Ahmed Naser Al-Raisi) இன்டா்போல் அமைப்பின் தலைவராகத் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

இவர் மீது, பலரை சட்டவிரோதமாக சித்ரவதை செய்ததாக மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்நிலையில் அவா் இன்டா்போல் தலைவராகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.
இந்தக் கூட்டத்தில் ஆசிய நாடுகள் பிரதிநிதிக்கான தேர்தலும் நடைபெற்றது. இதில், சீனா, சிங்கப்பூா், கொரியா, ஜோா்டன் நாடுகளில் இருந்தும் போட்டியிட்டனா். இந்த போட்டியில், இந்தியாவின் சாா்பில் போட்டியிட்ட, சிபிஐ சிறப்பு இயக்குநர் பிரவீன் சின்ஹா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.








