நாங்குநேரியில் பள்ளிமாணவரை சக மாணவர்களே வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் கடந்த சில மாதங்களில் மட்டும் அதே திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் இதுபோன்ற பல மோதல்கள் நடந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த இரு வாரங்களுக்கு முன்பாக திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் அருகில் உள்ள தனியார் பாலிடென்கிக் கல்லூரி மாணவர்களை சாதிய வன்மத்துடன் அறிவாளால் வெட்டிய சம்பவம் அரங்கேறியது.
களக்காட்டில் சில மாதங்களுக்கு முன்பாக அதாவது கடந்த கல்வியாண்டின் இறுதிகட்ட நேரத்தில் களக்காடு பள்ளி வளாகத்திலேயே உருவான சாதிய மோதலில் மாணவர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடி அருகே உள்ள பள்ளக்கால் புதுக்குடி அரசுப் பள்ளியில் ஆதிக்க மனோபாவம் கொண்ட மாணவர் சக மாணவர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அழியாத வடுவாக உள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் கங்கை கொண்டான் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களிடையே சாதி ரீதியான மோதல் சம்பவங்கள் இன்றளவும் தொடர்வது மாணவர்களிடம் கூட சாதிய நச்சு எந்தளவுக்கு ஊடுருவி இருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. திருநெல்வேலி, தென்காசி, தூத்துகுடி மாவட்டங்களில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் சாதி அடையாளங்களை வெளிப்படுத்த கைகளில் கயிறு, நெற்றியில் பொட்டு, சட்டைகளில் சாதிகளின் நிறம் ஆகியவற்றை அனுமதிப்பதும் இதுபோன்ற குற்றங்கள் தொடர காரணமாகவும் அமைந்துள்ளன.







